பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கி.மு. 512ம் ஆண்டு, சிபேரிஸ் என்ற நாட்டுடன் அவனது நாடு போரிட நேர்ந்தது. அவனது நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த, மிலோ படைவீரர்கள் மத்தியிலே நின்று உற்சாகப் படுத்தினானாம். ஹிராகிலிஸ் என்பவன் வைத்திருந்த கதைபோல (பீமன் கதை போல) இவன் ஒன்றைச் செய்து எடுத்துக் கொண்டு, ஒலிம்பிக் பந்தயத்தில் பெற்ற வீர முடியை ஒய்யாரமாக அணிந்து கொண்டு, அந்த நாட்டுப் படைத் தளபதி போல, வீரர்களிடையே புகுந்து சென்று, உற்சாகமாகப் பேசி ஊக்கப்படுத்திப் போரிடத் தூண்டினான். அந்த மாவீரனைப் பார்த்த போர் வீரர்களும், மனதில் வீரம் பொங்கப் போராடி வெற்றி பெற்றார்கள். உயிருக்கும் அஞ்சாத வீரனாக நடைபோட்டவண்ணம் மிலோ வீரர்களை ஊக்குவித்திருக்கிறான்.

(நமது நாட்டில் சீனாவுடன் போர் நடந்தபோது, நமது இராணுவ வீரர்கள் மத்தியில் சினிமா நடிக நடிகைகள் சென்று, ஆடிப்பாடி உற்சாகம் ஊட்டியதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.)

வலிமைபெற்ற வீரன் ஒருவனுக்கு எங்கு சென்றாலும் பெருமையும் புகழும் உண்டு என்பதற்கு மிலோ சான்றாக வாழ்ந்திருக்கிறான். கணிதம் பயின்றவர்களுக்கு பித்தகோரஸ் என்னும் தத்துவ ஞானியின் பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும், கணித சாத்திரத்தில் வல்லவர் அவர். அவரது மகள் மியூவா (Muia) என்பவளை மிலோ தன் மனைவியாக்கிக் கொண்டிருக்கிறான்.

இவர்களுக்கு வாரிசாகப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மங்கையான அந்தப் பெண்ணை மணம் புரிந்து கொள்ள டெமாசீட்ஸ் எனும் மருத்துவன் வந்தான். அவன் அந்நாட்டு அரசருக்கு மருத்துவம் செய்பவன். புகழ்பெற்ற மருத்துவன், அந்த நாட்டு வழக்கப்படி, பெண் வீட்டாரே