பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

11


ஒரு பகுதியாகவே மாறிவிட்டிருந்தது. அவர்களது ஒவ்வொரு உணர்விலும் கடவுள் நம்பிக்கை இழையோடியிருந்தது. ஒவ்வொரு செயலிலும் உற்சாகம் ஊட்டும் உயிரோட்டம் காரணமாக வெளிப்பட்டுக்கிடந்தது.

ஆகவே, ஒவ்வொரு நாடும், அதன் இனவழி மக்களும், தங்களை ஆள்கின்ற சக்திகள் (Powers) இந்த பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன என்று நம்பினார்கள். இந்த உலகையே ஆள்கின்ற சக்திகளாகவும் அவை விளங்குகின்றன என்பதையும் நேர் முகமாகக் கண்டு, தெளிந்து கொண்டார்கள்.

சூரியன், சந்திரன், புயல், பூமி, கடல், இடி, மின்னல், மழை போன்றவைகள் தங்களைக் காக்கின்ற சக்திகள், ஆள்கின்ற அதிசயங்கள் என்று தெரிந்ததுடன் அவைகள் எல்லாம் அதிகமான சக்தியுடைய, மனித சக்திக்கும் அப்பாற்பட்ட வல்லமை வாய்ந்த கடவுள்களின் வேலைகள் என்றும் பரிபூரணமாக உணர்ந்து நம்பினார்கள்.

இஸ்ரேல் போன்ற நாடானது, ஒரே ஒரு கடவுள், அதற்கு அளப்பரிய ஆற்றல் உண்டு என்று நம்பியது. ஆனால் இந்தியா போன்ற நாடுகள் பல்வேறு கடவுளர்களைப் போற்றி வணங்கும் நாடுகளாகப் பெருகிக் கொண்டிருந்தன.

மனிதர்களும் கடவுள்களும்

மனிதர்கள் கடவுள்களைப் படைத்தார்கள் என்று நம்புவது ஒரு புறம். கடவுள்கள் தாம் மனிதர்களைப் படைத்தார்கள் என்று நம்புவது மறுபுறம். இருபுறமும் திரிபுரமாக நம்மைச் சுற்ற வைத்து, திகைத்துத் திண்டாட வைக்கின்றன.

முதலில், கடவுள்கள் மனிதர்களைப் படைத்தார்கள் என்று நம்பிக்கையூட்டுகின்ற பல்வேறு நாடுகளில் உலவும் கதைகளில், ஒரு சில கதைகளை நாம் இங்கே காண்போம்.