பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

135


என்ற ஆசை, தாய்க்குத் தாயாயும் சண்டை பயிற்சிக்குக் குருவாகவும் விளங்கிய அவளுக்கு இருக்கதா என்ன? அவள் ஆசைக்குக் குறுக்கே நின்றது கிரேக்க நாட்டுச் சட்டம்.

பந்தய மைதானத்திற்குள் பெண்கள் நுழையக் கூடாது என்பது தான் கடுமையான சட்டம். மீறி யாராவது வந்ததையோ, மறைந்திருந்துப் பார்ப்பதையோ கண்டுபிடித்து விட்டால், பிடிபட்டவர்களுக்கு உடனே மரண தண்டனை என்பது தான் அந்தக் கொடுமையான சட்டம்.

பிரனிஸ் தன் உயிரைத் துச்சமாக மதித்தாள். தன் மகன் சண்டையிடுவதைப் பார்த்தேயாக வேண்டும் என்று முடிவெடுத்தாள், ஆணைப்போல மாறு வேடம் அணிந்தாள். பந்தய அரங்கிற்குள் நுழைந்து, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கொண்டாள். பந்தயங்கள் தொடங்கின. பிரனிஸ் மைந்தன் பிசிடோரஸ் குத்துச் சண்டை தொடர்ந்தது. தன் மகன் வெற்றி பெற்றான் என்று அறிந்ததும், பார்வையாளர்கள் பகுதியிலிருந்த பிரனிஸ், பாய்ந்து சென்று, தன் மகனை ஆரத் தழுவி, முத்தமிட்டுக் களிகூர்ந்தாள்.

அந்த வேகத்திலும் ஆவேசத்திலும் தன்னை மறந்தாள். அத்துடன் நின்றால் பரவாயில்லையே! அவளது ஆடை குலைந்தது. மாறுவேடம் கலைந்தது. பெண்ணொருத்தி உள்ளே வந்துவிட்டாள் என்ற பெருங்குரல் அரங்கிற்குள்ளே அலறியது. சட்டத்தை மீறிய பெண்ணைத் தண்டிக்க வேண்டுமென்ற நிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டாள்.

பிரனிஸ் தன் கதையைக் கூறினாள். தன் பரம்பரையைப் பற்றிக் கூறினாள். தன் மகனுக்குத் தான் பயிற்சி அளித்த விதத்தை விவரித்தாள். தன் மகன் சண்டையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை விளக்கினாள். தன் கடமை முடிந்தது. தன் உயிரைத் தர தனக்கு ஆட்சேபனை இல்லை. மரண தண்டனையை மனமார வரவேற்கிறேன் என்று வாக்குமூலம் அளித்தாள்.