பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

27


விழாக்கள் எல்லாமே, நிலங்களில் நிறைய விளையச் செய்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் வகையிலே தான் அமைந்திருந்தன. அவற்றை அவர்கள் அறுவடைத் திருநாள் என்று போற்றினர். நம் தமிழர்களோ, பொங்கல் திருநாள் என்று சாற்றினர்.

அடிக்கடி நடைபெற்ற திருவிழாக்கள் எல்லாம், மக்களை ஒன்று கூட்டவும், உள்ளத்தால் ஒன்று படவும் உதவின. மகிழ்ந்த மக்கள், விருந்துகள் நடத்தி, ஒருவருக்கொருவர் உபசரித்து, வைபவமாகக் கொண்டாடவும், விழாக்கள் உதவின.

மக்கள் ஆண்டவனை நோக்கி வணங்கி, தங்களை சமர்பிப்பது போல விரதமும் இருக்க ஆரம்பித்தனர். தேசம் முழுவதும் ஒரு நாளைக் குறித்து, உண்ணா விரத நாளாக சுட்டிக் காட்டி, தேசிய விரதம் இருக்கவும் செய்தனர். நம் நாட்டில் அமாவாசை விரதத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

தேசத்தின் திருப்புமுனை

விரதமும், விழாக் கோலமும், நாட்டு மக்களிடையே பிரபலமாயின, சில சமயங்களில், நாட்டில் நடைபெற்ற முக்கிய சரித்திர நிகழ்ச்சிகளை நினைவு படுத்தவும், விழாக்கள் நடைபெற்றன.

நாடு பகைவர்களால் முற்றுகையிடப்பட்ட நிகழ்ச்சி, அல்லது தங்கள் நாடு அன்னியர்க்கு அடிமையாக்கி, அதிலிருந்து விடுதலைபெற்ற நிகழ்ச்சி, நாட்டுத் தலைவரின் தியாக மரணம். போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் நினைவில் வைத்துக் கொண்டு போற்ற வேண்டும். இதய எழுச்சியைப் பெற வேண்டும் என்பதற்காகவும், விழாக்கள் எடுக்கப்பட்டன.