பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

63


எல்லோரும் அமர்ந்திருக்கும். இடத்தில் உட்கார்ந்து, நிகழ்ச்சிகளில் மனம் லயித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குத்துச் சண்டைப் போட்டித் தொடங்கி விட்டது. பிசிடோரஸ் என்ற பெயருள்ள வீரன் போட்டியில் கலந்து கொண்டான். அவன் செய்த சண்டை எல்லோருக்கும் மயிர் சிலிர்க்க வைக்கக் கூடியதாக இருந்தது. தன் எதிரியை எளிதாக மட்டும் அல்ல. இலாவகத்தோடும் சண்டையிட்டு மாபெரும் வெற்றியும் பெற்று விட்டான்.

பார்வையாளர் பகுதியிலே, மாறு வேடத்தில் பதுங்கியிருந்த மங்கைக்கோ அளவில்லாத ஆனந்தம்! ஆனந்தம் மிதமிஞ்சி வெறியாகியது. அந்த வெறி தந்த ஆவேசத்தினால், தன்னை இழந்தாள். தன் நிலையை மறந்தாள், ஓடிப் போய் அவனை ஆரத் தழுவிக் கொண்டாள். ஆசை தீர முத்தமிட்டாள், அவள் நடந்து கொண்ட ஆவேச நிலையிலே; அவள் தலைப்பாகைக் கலைந்தது. ஒப்பனை உருவிழந்தது. ஆண் பெண்ணானது கண்டு அந்த அரங்கமே. அதிர்ச்சியுற்றது, ஆத்திரமடைந்தது.

ஆமாம்! பெண்ணொருத்தி உள்ளே புகுந்து விட்டாள் என்றதும், பிரளயமே வந்து விட்டது போன்ற ஓர் உணர்வு மக்கள் மருண்டனர். மயங்கினர். பரிதாபத்திற்குரிய பெண்ணைப் பலமுறை பார்த்தனர். தானாகவே சாவைத் தேடி வந்த தையலைக் கண்டு ஆத்திரப்பட்டவர் பலர். அனுதாபப்பட்டவர் சிலர்.

அதிகாரிகளின் முன்னே நிறுத்தப்பட்டாள் அந்தப் பெண். மரண தண்டனை நிச்சயம் என்ற முடிவுக்கே எல்லோரும் வந்து விட்ட நேரம், மங்கையோ, மாணவாக்கு மூலம் போல, தன் கதையைக் கூறத் தொடங்கினாள். அதிகாரிகளும் குறுக்கிடவில்லை.