பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

81


கொடுத்தார்கள்? ஆலிவ் மலர் வளையம்தானே! இறைவன் கோயில் அருகே வளர்ந்த ஒரே காரணத்தால் ஆலிவ் மரங்கள் புனிதம் மிகுந்தவை என்பதை பக்திப் பெருக்கில் வாழ்ந்த முற்கால மக்கள் ஒத்துக்கொண்டனர். உண்மையுடன் வழிபட்டனர். பெருமையுடன் ஏற்றுக் கொண்டனர். ஆனால், பாதை மாறிப்போன பிற்கால மக்களுக்கு, அந்நியர் ஆட்சியில் அடங்கிக் கிடந்த மக்களுக்கு எவ்வாறு புரியும்?

இலையாலான மலர் வளையப் பரிசு எங்களுக்குத் தேவையில்லை என்ற அளவுக்கு கிரேக்க நாட்டு வீரர்கள் கேவலமாகப் பேசத் தொடங்கினர். வெறும் புகழ் ஆரவாரம், வெற்றுக் கூச்சல், வீணான பேச்சு வார்த்தை அலங்காரம் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்று வாதாடவும் தொடங்கி விட்டார்கள். இவ்வாறு பேசியவர்கள் இறுதியாக, வெற்றிக்குப் பரிசாகப் பணமும், விலையுயர்ந்த பரிசுப் பொருள்களுமே வேண்டும் என்று விரும்பினர், வற்புறுத்தினர் வேறு வழியில்லை... அவர்கள் வளர்ந்த வளர்ப்பு அவ்வாறு? பெற்றப் பண்பாடு அப்படி.

நாட்டுப் பற்றோடும், நல்லிறைவன் திருப்பெயரோடும், நனிசான்ற உடல் ஆற்றலோடும் இணைந்த மத விழாவாகவும், மாண்புமிகு விளையாட்டு விழாவாகவும், கிரேக்க நாட்டிலே கொண்டாடப் பெற்ற ஒலிம்பிக் பந்தயங்கள், நாளா வட்டத்திலே தமக்குரிய மகத்துவத்தை, மேம்பாட்டை இழக்கத் தொடங்கின.

புனித விழாவாகப் புவியிலே பிறப்பெடுத்த பந்தயத்திடல், மேலும் மேலும் வியாபாரத் தலமாக, வம்பர்கள் கூடி வாயாடி மகிழும் மடமாக, வேடிக்கைக் காட்டும் சர்க்கஸ் கூடாரமாக, பொழுது போகாதவர்கள் ஏனோதானோவென்று வேடிக்கைப் பார்த்துப் பொழுதைக் கழிக்கும் இழிநிலை அரங்கமாக மாறத் தொடங்கியது.