பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

83


யாரும் இருக்கக்கூடாது என்ற ஓர் இழிந்த சூழ்நிலையை உண்டுபண்ணி விட்டான். அது மட்டுமல்ல; ஒலிம்பிக் போட்டிகளிலே இல்லாத புதிய புதிய போட்டி நிகழ்ச்சிகளை, அவ்வப்போது, தனக்கேற்ற வகையில், தனக்கேற்ற முறைகளில் உண்டாக்கியும், மாற்றி அமைத்தும் வெற்றி பெற்றான். சிறந்த வீரனாகக்கூட வெற்றி பெற்றான். அவன் தேர் ஓட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றான். எப்படி? வெற்றி பெற்ற லட்சணம் இப்படித்தான்.

தேர் ஓட்டப் பந்தயத்தில் மன்னன் நீரோவும், அவனைச் சேர்ந்த மற்ற (உடலாளர்களும்) வீரர்களும் போட்டியிட்டனர். வேகமாகத் தேரோட்டி வந்த மன்னன் பாதி வழியிலே திடீரென்று தேரிலிருந்து விழுந்துவிட்டான். மற்றவர்களுக்கு என்ன? தேரை ஓட்டிக்கொண்டு முதலாவதாகச் சென்று வெற்றி பெறவேண்டியதுதானே முறை? போட்டியில் பங்குகொண்ட அத்தனைபேரும், கீழே விழுந்த மன்னன் எழுந்து, தேரில் ஏறிக்கொண்டு, மீண்டும் தேரை ஓட்டும் வரை அதே இடத்தில் காத்துக்கொண்டு நின்றனர்.

மன்னன் பிறகு தேரில் ஏறி ஓட்டிச் சென்று முதலாவது இடத்தை அடையும் வரை, அவர்கள் அவன் பின்னால்தான் ஒட்டிச் சென்றிருக்கிறார்கள். மன்னனுக்குப் பயந்து கொண்டு மற்றவர்கள் போட்டிகளில் பின்வாங்க, மன்னன் நீரோ, தானே எல்லா நிகழ்ச்சிகளிலும் போட்டியிட்டு அத்தனைப் போட்டிகளிலும் தானே முதலாவது இடத்தைப் பிடித்து வெற்றி வீரனாக வந்திருக்கிறான். புகழ் மிக்க, பேராற்றல் மிக்கதோர் ஒலிம்பிக் பந்தயத்தைப் புழுதியிலும் கேவலமாக, பொய் நிறைந்த களமாக மாற்றிவிட்டான்.

அத்துடன் விட்டானா! அந்த நாட்டை ஆள்கின்ற அரசன் என்ற ஆணவத்தாலோ என்னவோ, தானே தலையாய வீரன் என்று எண்ணிக்கொண்ட கர்வத்தாலோ என்னவோ,