பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இருக்கப்போகின்றன! வரலாற்றுக் கருவூலங்களை பூகம்பம் மட்டும் புதைக்கவில்லை.... புனிதமான ஆலிவ் மரங்களை வளர்த்த புனிதமான ஆல்பியஸ் ஆறும் பொங்கியெழுந்து பெரு வெள்ளத்தைக் கொண்டு வந்து மீதியிருந்த மண்மேட்டையும் கரைத்து, சாதாரணத் தரையாக மாற்றி அழித்து ஆறுதல் அடைந்தது.

அழகான பள்ளத்தாக்கிலே, ஒப்புயர்வற்ற ஒலிம்பியா பகுதியிலே அதற்குப் பிறகு கோயிலும் இல்லை. குடியிருப்பும் இல்லை இறைவனை வணங்கவும் அதைப்பற்றி நினைக்கவும் யாரும் இல்லை காலம் மனிதனைக் கொண்டு வளர்த்தது காலமே மனிதனைக் கொண்டு அழிக்க வைத்தது.

ஒலிம்பிக் பந்தயத்தின் பீடும் பெருமையும், சீரும் சிறப்பும் எல்லாம் காலத்தால், மனிதனின் ஆங்காரக் கோலத்தால் அழிந்தன. அடுத்தடுத்து ரோமை ஆண்ட அரசர்கள், பந்தயத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படக்கூட இல்லை.

பதினைந்து நூற்றாண்டுகள் பறந்தோடின. ஒலிம்பிக் பந்தயம் என்று ஒன்று இருந்ததாகவும், அது கிரேக்க நாட்டிலே நடந்ததாகவும் மக்கள் பேசிக் கொண்டனர். ஒரு சில குறிப்புக்கள் அவர்களுக்கு உதவின. பழைய ஒலிம்பிக் மறைந்தாலும், அது கிரேக்க நாட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்து அழிந்தாலும், இன்று அகில உலகமெங்கும் அவனி போற்றும் ஆண்மையாளன் திரு. பியரி கூபர்டின் பிரபு அவர்களால் புதிய ஒலிம்பிக் பந்தயம் தோற்றுவிக்கப்பட்டு உலக வரலாற்றில் தனித்துவ மிக்க நிகழ்ச்சியாக மக்களிடையே பேரெழுச்சியை, கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது என்பது வரலாறு காட்டும் உண்மை.