பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உறைவிடம்

அக்கேய மாதர்கள் உறைவதற்கெனத் தனி இடங்கள் இல்லங்கட்குள் இருந்தன. ஆனால், விருந்து முதலிய சிறப்புகள் நடைபெறும் காலங்களில், வேறுபாடின்றிப் பெண்மக்கள் ஆண்மக்களிடையே அமர்ந்து விருந்தினை அயர்வர். அந்நாட்டு மாதர்கள் வெறும் அடுப்பூதிகளாக இன்றி, முழு உரிமை உடையவர்களாய் இருந்தது மிகமிக வியக்கத்தக்கதாகும். பகட்டான வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் ஈடுபட்டிருந்தாலும் மரியாதைப் பண்பில் சிறிதும் குறையாது வாழ்ந்ததுதான், மிகமிக இன்றியமையாத சமூக இயல்புகளில் ஒன்றாகும். இவர்கள்பால் அச்சமும் நாணமும் அமைந்திருந்தன. இளைஞர்கள் முதியவர்களைக் கண்டால் எழுந்து நின்று பணிவு காட்டுவர். “யான் கண்டனை யர் என் இளையர்” என்னும் பிசிராந்தையார் பாடல் இவர்கட்குப் பொருந்தும். அக்கேயர் வெளிநாட்டு மக்களிடத்தும், புதியராக வந்தவர்களிடத்தும், அன்பும் இரக்கமும் காட்டி வந்தனர்; பொறுமைக்கோர் உறைவிடமாகவும் விளங்கினர். இவர்கள் வாழ்வு இயற்கைக்கு இயைந்த வாழ்வு ஆகும்.

அக்கேயர்கள் வாழ்ந்த அரண்மனைகளின் அமைப்பு எளிமையானதென்றே சாற்றலாம். இவர்கள் சேர்ந்து வாழும் இடம் அரண்மனையில் அமைக்கப்பட்ட ஒரு பெரிய கூடமாகும். இதற்கு இடையே ஒரு சமையல் அறை அமைக்கப்பட்டிருக்கும். கூடம் நான்கு தூண்களின் ஆதரவில் நிலைத்திருக்