பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


ஆனால், இவர்கள் பெற்று வந்த உரிமை சிறிதே ஆகும். இவ்வாறு மக்களால் அமைக்கப்பட்ட அரசியல் பெருவாரியான மக்களால் தோற்றுவிக்கப்பட்ட குடியாட்சியாகும். அஃதாவது இது காறும் ஒருவர் தலைவராக இருந்து அரசன் என்னும் பெயரால் ஆண்டு வந்த ஆட்சி முறைக்கு அரசியலில் மாறும் நிலை ஏற்பட்டது. கோனாட்சி நீங்கிக் குடியாட்சி நிலைக்கு நகர் வந்துற்ற காரணத்தால் மக்கள் எல்லாத்துறையிலும், சம உரிமையைக்கேட்க முன் வரலாயினர். ‘காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள’ வேண்டுமல்லவா ?


3. ஸ்பார்ட்டர்களின் வாழ்க்கை

இயற்கை அழகு

அக்கேய மக்களால் தோற்றுவிக்கப்பட்ட சிடி ஸ்டேட்டுகளில் வளமான நகர் ஸ்பார்ட்டா (Sparta) வாகும். இந்நகர் லேசிடமன் (Lacedae mon) பள்ளத்தாக்கில் அழகு நகரமாக விளங்கியது. இந்நகரின் ஆழகுக்கு அழகு செய்வனபோல் இரோடஸ் (Eurotas) ஆறும் ஏனைய ஆறுகளும் பாய்ந்து சிறப்பளித்தன. ‘ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்’ என்பதும் நம் நாட்டுப் பழமொழி அன்றோ ! இவ்விடத்தை டோரியர்கள் (Dorians) தம் வசமாக்கிக் கொண்டு, ஸ்பார்ட்டாவில் ஏற்கனவே வசித்து வந்த உள்குடி மக்களைத் தமக்குக் கீழ்ப்படியச் செய்து நிலபுலங்களை உழுமாறு வற்புறுத்தி வந்தனர். வலியார் மெலியாரை அடர்த்து ஒறுப்பது உலக இயற்கைகளில் ஒன்று. டோரியர்களின்