பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


பிள்ளைகளைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்று நடத்துபவர் ஆவர். ஒருவரே எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று எதிர்பாராமல், அவரவர்கள் செய்யக்கூடியதை ‘இயல்வது கரவேல்’ என்னும் முதுமொழிக்கிணங்கப் பங்கிட்டுக் கொண்டு செய்தால் ஒவ்வொரு துறையிலும் யாவரும் முன்னேறுவர் அன்றோ ! உணவு கொள்ளுங்கால் எல்லாரும் ஒன்று சேர்ந்து உணவு கொள்வர். இன்னார் முன்னும், அதன்பின் இன்னார் பின்னும் உண்ணல் வேண்டுமென்னும் குறுகிய நோக்கம் அவர்கள்பால் இல்லை. அப்பள்ளியை நடத்துபவர்பாலும் இக்குறுகிய நோக்கம் இல்லை. இப்பழக்கம் ஒற்றுமை உணர்ச்சியை உண்டு பண்ணுவதற்குக் கையாளப் பட்டதாகும். இங்குப் பயிலும் பிள்ளைகள் பால் ஒரு தீக்குணம் மட்டும் இருந்து வந்தது. நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரையுண்டு ; புல்லிதழ் பூவிற்கும் உண்டு அல்லவா ? உணவு இல்லாத பொழுது அடுத்த வயல்களில் வளர்ந்துள்ள தானியங்களைத் திருடிக் கொணர்ந்து தம் வயிற்றை நிரப்பி வந்தனர். தம் வயிற்றுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்பது இவர்கள் இயல்புபோலும்! இப்பிள்ளைகளுக்கு வறுமையையும் செம்மையாகக் கொண்டு நடக்கவேண்டும் என்னும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. காலில் மிதியடி இல்லாதப்போது வெறுங்காலில் நடக்கவும், ஒரே உடை இருப்பினும் அதைக்கொண்டு மண் அமைதி அடையவும், பஞ்சனேயின்றிப் புல்லணையில் படுத்து உறங்கவும், பயிற்றுவிக்கப்பட்டனர். இப்பள்ளிச் சிறார்கள் இரோடஸ் ஆற்றில் நீந்திப் பழகினர்.