பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

 அறிந்த மக்களும் இவர் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் முறையில் நிற்கையில் தலைவராக இவரையே தேர்ந்தெடுக்கலாயினர். இவ்வாறாக முப்பதாண்டாகத் தொடர்ந்து இவர் தேர்ந்தெடுக்கப் பட்டாரென்றால், இவருக்கிருந்த திறமையையும், பொதுமக்கள் ஆதரவையும், என்னென்று இயம்பு வது! இத்தகைய பொது மக்களது ஆதரவு பெற்ற அரசராலேயோ, தலைவராலேயோதான் நாடும் நகரமும் முன்னேற முடியும். நாடு மன்னனைத் தான் உயிராகக் கொண்டது.

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

என்பதுதான் யாவரும் அறிந்த உண்மை. இந்த முறைக்கு இணங்கப் பெரிகில்ஸ் இருந்தது பாராட்டற்குரிய தாகும். இவர் தலைமை வகித்திருந்த காலங்களில் தம் ஆட்சியின் கீழிருந்த குடிமக்களின் முன்னேற்றத்தைக் குறித்துப் பெரிதும் பாடுபட்டனர். இவர் காலத்தில் வாணிபம் செழித்தோங்கியது. நாட்டின் செல்வமும் நனிமிக வளர்ந்தது. குடி மக்கள் தொகுதியும் செறிந்தது. வெளி நாட்டவர் பலரும் இங்கு இருக்க விழைந்து குடியேறின்ர். பெரிகில்ஸ் கலைச் செல்வம் வளர வழி வகைகளைக் கோலினர். கோயில்கள் பல கட்டப்பட்டன. அக் கோயில்கள் யாவும் ஒவியமும், சிற்பமும் மலிந்து விளங்கின.

புலவர் பெருமக்கள் புரவலர்களால் புரக்கப்பட்டனர். வரலாற்று அறிஞர்களும், கல் தச்சர்களும், தத்துவஞானிகளும் பெரிதும் ஆதரிக்கப்பட்டனர்.