பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

பக்கம் வழக்கைத் தீர்த்துக் கொள்ளவும் ஜூரர்களுக்குத் தம்பால் இரக்கம் ஏற்படவும் தாம் பிள்ளை குட்டிக்காரர் என்பதையும் கூறிக் குழந்தைகளையும் ஜூரர்களுக்குக் காட்டுவர். என்னதான் காட்டினாலும், கூறினாலும் ஜூரர்கள் இரு திறத்தார் வாக்கையும் கேட்டு, யார் உத்தமர் என்பதை அறிந்து, அதற்கேற்ற தீர்ப்பே கூறிவந்தனர். ஏதென்ஸ் நகரத்தார் நீதி நெறியில் தவறாது தலைசிறந்து விளங்கினர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நம் தமிழ் நாடும் நீதி நெறியினின்றும் தவறாது நடந்து வந்தது என்பது பொற்கைப் பாண்டியன் தன் கையைக் குறைத்துக் கொண்டதன் மூலமும், நெடுஞ்செழியன் கண்ணகி கூறிய உண்மையைக் கேட்டு உயிர் நீத்ததையும், மனுச்சோழன் தன் மகனைத் தேர்க்காலில் வைத்துக் கொன்றதையும் கொண்டு உணரலாம்.

சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந் தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’,

என்பது பொய்யா மொழியன்றோ ?

ஜூரர்கள் பலராக இருந்தமையால், அவரவர்கள் கருத்தும் மாறுபடும். அதனால் வாக்கெடுத்து அதன் மூலம் தீர்ப்புக் கூறி வந்தனர். ஜூரர்கள் கையில் பலகறை போன்ற ஒரு பொருளைக் கொடுத்திருப்பர். அதனை இரு சாடிகளில் ஒன்றில் இட வேண்டும். அச் சாடிகளுள் ஒன்று குற்றம் என்பதையும் மற்றென்று குற்றமின்று என்பதையும் காட்டவல்லன. அவற்றில் இடப்பட்ட பலகறைகளை எடுத்து எண்ணிக்கையில் எது விஞ்சுகின்றதோ, அந்த முறையில் தீர்ப்புக் கூறப்பட்டது.