பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ஒருவர்க்கொருவர் நெருங்கிப் பழகியதால் தமக்குள் சகோதர நேய ஒருமைப்பாடுடையவராய் வாழ்ந்தனர். ஏதென்ஸ், நகரம், மக்கள் தெருக்கம் மிகுதியாகக் கொண்டிருந்ததனால், ஒருவரை ஒருவர் அறிந்து வாழ்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் இருந்தது. பல்வேறு இனத்து மக்கள் ஒன்று கூடி இனத்துக்கு இனம் தம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் ஒரே முறையைக் கையாண்டனர்; செல்வக் குடியில் பிறந்த இளைஞர்கள் தம் முடியை நீளத்தொங்கவிட்டுக்கொண்டு பரிகள்மீது ஊர்ந்து செல்வர். கிரேக்கர்கள் சிலம்பக் கூடங்களிலும், மற்றும் பல பொது இடங்களிலும் அடிக்கடி கூடுவர். அக் காலங்களில் நன்கு ஒருவரோடு ஒருவர் உரையாடுவர். இவர்கள் பேச்சு வெறும் வாய்ப்பேச்சளவில் இராது. உடனுக்குடன் கைச் சைகை, முகச் சைகை முதலான அங்க அசைவுகள் கலந்தனவாகவே இருக்கும். இஃது இவர்கட்குப் பரம்பரையாக் அமைந்த ஒரு பண்பாகும். இவர்கள் சோம்பலை அறவே வெறுத்தவர் என்றும், சுறுசுறுப்பாகவே இருக்க விரும்புபவர். பேசிக்கொண்டிருக்கும்போது உலவிக்கொண்டே இருப்பர். உலவுவதில் இவர்கட்குப் பெரு விருப்பம் உண்டு. பத்து மைல் நடந்தாலும் சோர்வு தட்டாது என்பது இவர்கள் கொள்கை. கிராம வாழ்க்கையைப் பெரிதும் விரும்புவர். அதன் இயற்கை எழிலே இதற்குக் காரணமாகும். ஆவணங்களே இவர்கள் விரும்பி நடமாடும் இடங்கள். அங்குத் தோன்றும் இரைச்சலும், சுறுசுறுப்பும் இவர்கட்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டுவனவாகும். ஆவணங்கள் நகரின் நடுப்பகுதியில் இருக்கும்.