பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
55

என்னும் முதுமொழிக்கிணங்கப் பகலில் சிறிது வசதி ஏற்பட்ட இடத்தில் உறங்குவர். ஆனால் வாகடநூல் பகலுறக்கத்தை மறுக்கின்றது. “பகலுறக்கம் செய்யார் நோயின்மை வேண்டுவார்” என்பது விதி. மாலையானதும் உடற்பயிற்சி புரிவர்; பயிற்சிக்குப் பிறகு நீராடுவர். ஆனால், நீராடுவதற்கு அடிமைகளைக் கொண்டு தம் யாக்கைக்கு எண்ணெய் தேய்க்கச் செய்வர். எண்ணெய் தேய்த்துச் சிறிது நேரங்கழித்து ஓர் உலோகக் கருவியால் அழுக்கு உள்பட எண்ணெயை வழித்து எடுத்து விடுவர். நம் போன்று எண்ணெய் நீக்கச் சிகைக்காயையோ அன்றி வேறு எதையோ தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இவர்கள்பால் இல்லை. எண்ணய் வழித்து எடுக்கப்பட்டபின் நீரில் குளிப்பர். இக்குளியலும் மேலிருந்து சிறு சல்லிகள் மூலம் வரும் குளிர் நீரில் ஆகும். இஃது உடற்கு இன்பமாக இருக்கும். வெந்நீரில் மூழ்கும் பழக்கம் கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை பழக்கத்தில் வந்திலது.

வெந்நீர்க் குளியலைப் பற்றி நாமும் சிறிது விழிப்பாக இருத்தல் நல்லது. இளைஞர்களும் காளைகளும் தண்ணீரில்தான் மூழ்குதல் வேண்டும். தண்ணீர் தான் நரம்புகளுக்கு உரமூட்டுவது. வெந்நீரை நோயாளிர், வயது முதிர்ந்தோர் பயன்படுத்த வேண்டும். “சனி நீராடு” என்பதற்குச் சனிக்கிழமை தோறும் வெந்நீரில் குளி என்பது ஒரு பொருளாக இருப்பினும், ஊறிவருகின்ற கிணற்று நீரிலோ, கீர் வீழ்ச்சி நீரிலோ ஆற்று நீரிலோ நீராடு என்பது பொருளாகும். ஆகவே குளிப்பதற்குத் தண்ணிரே சாலச் சிறந்தது என்பதை உணர்க.