பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

 குறைய மூவாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கிரேக்க மொழியைப் பேசும் மரபினரான அக்கேயர்கள் (Achaeans) கிழக்கு ஐரோப்பாக் கண்டத் தினின்றும் கிரீஸ் நகரம் வந்து குடியேறினர். இவர்கள் குடிபுகுமுன் உள்நாட்டுக் குடிகளான பண்டைய கிரீஸ் நகர மக்கள், மிகவும் உயர்வான நிலையில் நாகரிகம் வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அந்நிலையில் இருந்தனர் என்பதை, அவர்கள் அமைத்திருந்த அழகிய அரண்மனைகளும், அவற்றில் அமைந்திருந்த திண்மைமிக்க சுவர்களும், கோட்டை கொத்தளங்களும், நன்கு சான்று கூற வல்லனவாக இருந்தன. இன்னோரன்ன இயல்பு வாய்ந்த கட்டட அமைப்பினைக் கண்ட அக்கேயர்கள் கிரீஸ் நகரிலேயே தாம் வாழ உறுதிகொண்டு, அதற்கு ஆவன அமைத்துக் கொண்டனர். நல் வாழ்வுக்கு இது நல்லிடம் என்று கண்ட இடங்களில், மக்கள் குடியேறி வசிக்க விரும்புவது இயற்கை தானே! ஒரு நாட்டின் பண்டைய ஒழுகலாற்றை அறிதற்குப் பண்டைய ஓவியங்களும் கல்வெட்டுக்களுமே உற்ற துணையாவன என்பது வரலாற்றூசிரியர் துணிபாகும். நம் தமிழ்நாட்டுப் பழங்கால நாகரிகத்தினையுணர்வதும் இவற்றால் தான் என்பதையும் ஈண்டு நினைவுபடுத்திக்கொள்ளுதல் வேண்டும். இவர்கள் எம்முறையில் அங்கு வாழ்வதற்கான வளங்களையும், நலன்களையும் ஏற்படுத்திக் கொண்டனர் என்பதை அவர்களது கல் ஒவியங்களாலும், கல் வெட்டுக்களாலும் தெள்ளத் தெளிய அறிந்துகொள்ளலாம்.