பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80


செம்மையுறச் செய்தனர் என்பதை அறியலாம். இப்படிப்பட்ட எண்ணமே ஒவ்வொருவருக்கும் அமைதல் வேண்டும். பிறரை மகிழ்விக்க வேண்டுவதற்காக இதனை இயற்றுகிறேன் என்று கருதாமல் இப்படி இயற்றுவது எனக்கே நலனாக இருக்கிறது என்று எண்ணி இயற்றுதல் வேண்டும். இப்படிச் செய்யப்படும் செயல்கள் எவராலும் எக்காலத்திலும் பாராட்டப்படும் என்பதில் ஐயமில்லை.

ஏதென்ஸ் நகரின் சாலைகள் புழுதி படிந்திருக்கும் என்று முன்பே கூறப்பட்டது. ஆங்குக் கழிநீர்களை அவ்வப்போது அகற்றுவதற்குரிய முறை அக்காலத்தில் இல்லை. இது சுகாதாரம் பாதிக்கப்படவும் மக்கள் நோய்வாய்ப்படவும் ஏதுவாயிற்று. வீடுகள் எளிய தோற்றம் அளித்தன. இவ்வீட்டு இளஞ்சிறுவர்கள் புழுதியில் படிந்து விளையாடி வந்தனர். பிள்ளைகளையன்றிப் பெரியவர்களும், மாசுபடிந்த மேனியராய் விளங்கினர். இரவலர்கட்கோ குறைவில்லை. இவர்கள் தெருவெங்கும் நிறைந்திருந்தனர். இவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களாதலின், அந்நோயின் காரணமாக உருமாறிக் காணப்பட்டனர். புழுதிகளுக்கும், அழகற்ற தோற்றங்கட்கும் இடையே மேகத்திடையே மின்ஒளி தோன்றுவது போன்று தூய்மைக் கோலமும், தெய்வச் சிலைகளும் மக்கள் உருவங்களும், கவிஞர் தோற்றமும் காட்சியளித்துக் கொண்டிருந்தன. வானளாவிய கோபுரங்கள் எல்லாருடைய மனங்களையும் கவர்ந்து கொண்டு விளங்கின. சேய்மையில் இருந்து வருவோரை “எம்மைக் காண ஈண்டு வருக வருக” என்று அழைப்பன போன்று நிலவும் இவற்றை