பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39

என்று எண்ணி, அப்பட்சணங்கள் அனைத்தையும் தானே தின்று விட்டான்.

வருணன் தனக்குப் போட்ட பட்சணங்களில் பாதி எடுத்துத் தனியே வைத்தான் மீதிப் பாதியைத் தின்ற பொழுதும் திருப்தி உண்டாகவில்லை. “நம்முடைய தம்பிமார்கள் பட்சணங்களைக் கொண்டு போய்க் கொடுப்பார்கள். அது அம்மாவுக்குப் போதும். இதையும் நாமே தின்று விடலாம்” என்று எடுத்து வைத்ததையும் தின்று விட்டான்.

வாயுதேவனும் முதலில் தன்னுடைய பட்சணங்களைத் தாய்க்காக எடுத்து வைத்தான். ஆனால் அவனுக்கும் சபலம் தாங்க முடியவில்லை. பாதி சாப்பிட்டு விடலாம் என்று பாதியைச் சாப்பிட்டான். மறுபடியும் அவனுக்கு ஆவல் எழவே, மீதிப் பாதியையும் தானே தின்று தீர்த்தான்.

சந்திரன் தனக்குப் போட்ட பட்சணங்கள் எல்லாவற்றையும் எடுத்துத் தனியே வைத்துவிட்டு. மற்றவற்றைச்சாப்பிட்டான். எல்லோரும் சாப்பிட்ட பிறகு அவரவர்கள் தங்கள் தங்கள் வீடு நோக்கிப் போனார்கள். சூரியனும் அவனது தம்பி மூவரும் ஆக நால்வ, 'மாக தங்கள் வீட்டை அடைந்தனர்.

தாய் அவர்களை நோக்கி, “எனக்குப்பட்சணம் கொண்டு வந்தீர்களா?” என்று கேட்டாள்.

சூரியன் ஒரு பதிலும் பேசவில்லை. வாயு தேவனும் வருணனும் தலையைக் குனிந்து கொண்டார்.