பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

யாரோ ஒருவர் பெயர் இல்லாமல் மொட்டை சீட்டு ஒன்றில், “சும்மா இருப்பது என்பது நீங் கள் நினைப்பது போல இழிவான காரியம் அல்ல. நீங்கள் ஒரு நாள் சும்மா இருந்து பாருங்கள், அப்போது அதன் அருமை தெரியும்” என்று எழுதித் தர்மகர்த்தா கையில் கிடைக்கும்படிச் செய்தார்.

அதைப் பார்த்த தர்மகர்த்தாவிற்கு முதலில் கோபம் வந்தாலும், உண்மையாகவே சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் உடையவர் ஆகையால் கோபத்தை விலக்கி, ஆலோசித்துப் பார்த்தார். ‘அப்படியா சங்கதி? சும்மா இருக்கிறது அவ்வளவு பெரிய காரியமா? எங்கே, நான் பார்க்கிறேன்’ என்று எண்ணி மறு நாள் சும்மா இருக்கும் விரதத்தை மேற்கொண்டார்.

பேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டார். யாரோ வராத நண்பர் வந்தார். அவரை அறியாமலே “வாருங்கள்” என்று கூற வாய் முந்தியது. அடக்கிக் கொண்டார். எப்படியோ சைகை செய்து பேசாமல் அவரை அனுப்பி விட்டார். அவர் மனைவி எப்போதும் போல் அடிக்கொரு முறை என்ன என்னவோ பேச வந்தாள். அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. பேசவோ வழி இல்லை. குழந்தைகள் அன்றைக்கென்று அதிக விஷமம் செய்தன. ஒரு குழந்தை அவருடைய விபூதிப் பையை அவிழ்த்து விபூதியை வாரி இறைத்தது. கோபத்தோடு பளார் என்று