பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66

-றான். அவனை முதலில் வெல்லவேண்டும். அதற்கு வீமனே ஏற்றவன்” என்று கண்ணன் கூறினான்.

சராசந்தனைக் கொல்ல எண்ணி, கண்ணன், அர்ச்சுனன், வீமன், ஆகியோர் அந்தணர்களைப் போல் வேடம் பூண்டு சென்றனர். அவ்வாறு அந்தண வேடம் பூண்ட அந்த மூவரும் மகத நாட்டுக்குள் சராசந்தனுடைய நகரத்தை அடைந்தனர். அவர்கள் அரண்மனையை அடைந்து வாயில் காவலரிடம், “மூன்று அந்தணர்கள் உன்னைப் பார்க்கும் பொருட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிவிப்பாயாக” என்று கண்ணன் கூறினான்.

அரசன், “அவர்களை அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, மூவரும் உள்ளே புகுத்து அவன் இட்ட தவிசில் அமர்ந்து ஆசியும் கூறினார்கள்.

அப்போது மகத மன்னன் அவர்களைக் கூர்ந்து நோக்கி “உங்களைப் பார்த்தால் அந்தணர் என்று தோன்றவில்லை. உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் யார்?” என்று கேட்டான்.

“நான் யாதவ குலத்தலைவனாகிய கண்ணன் இந்த இருவரும் தருமபுத்திரனின் தம்பியர்; வீமனும் அர்சுனனும். உன்னுடைய வள நகரைக் காணும் பொருட்டு வந்தோம். அரசர்கள் இதை அணுகுவது அரிதாதலின் மறையவர் உருவத்தைப் புனைந்து புகுந்தோம்” என்றான் கண்ணன்.

சராசந்தன், “அப்படியா? என் தோள்கள் பகைவரைப் பெறாமல் தினவு கொண்டிருக்கின்றன.