பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ஒரு சமயம் அவருடைய கணக்குப் பிள்ளை வரிகளைச் சற்றுக் கடுமையாகத் தண்டி வந்தான். பணம் தேவையாக இருந்ததால் வெள்ளை மருது அவன் அவ்வாறு செய்வதைத் தடுக்காமல் இருந்தார்.

கொடுக்கக் கூடியவர்கள், சண்டித்தனம் செய்கிறவர்கள், நல்லவர், பொல்லாதவர் என்று பாராமல் எல்லோரையும் ஒரு கிட்டிக்குள் அகப்படுத்துவது போல், அந்தக் கணக்குப் பிள்ளை செய்து வந்தான். இதனால் சில பெரிய மனிதர்களுடைய உள்ளங்களில் வெறுப்பு உண்டாயிற்று. ஆனால், நாட்டுத் தலைவருடைய ஆணைக்கு மாறு சொல்லலாமா? வெள்ளை மருது சொல்லித்தான் கணக்குப் பிள்ளை அவ்வளவு கண்டிப்பாக இருக்கிறான்' என்று எல்லோரும் எண்ணினார்கள்.

‘காலம் நன்றாக இருந்தால், மழை சரியாகப் பெய்து விளைச்சலும் உள்ளபடி விளைந்தால், நாங்களே வரியைக் கட்டி விட மாட்டோமா? பஞ்ச காலம் ஆகையால் கையில் பணம் சேரவில்லை இந்தக் காலத்தில் இப்படிக் கெடுபிடி பண்ணுவதனால் லாபம் ஒன்றும் இல்லை’ என்று அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டார்கள்.

வரி வசூலாகி வருகிறதைக் கண்டு வெள்ளை மருதுக்கு ஆனந்தம் உண்டாயிற்று. எப்படி வசூலாகிறது என்பதை அவன் விசாரிக்கவில்லை.