பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

கணக்குப் பிள்ளை செய்யும் கொடுமைகள் அவன் காதில் எட்டவில்லை.

புலவர் பரம்பரையைச் சேர்ந்த கிழவி ஒருத்தி இருந்தாள். அவளும் சமஸ்தானத்துக்கு வரி செலுத்த வேண்டிய பாக்கி இருந்தது. கணக்குப் பிள்ளை அவளிடமும் இரண்டு, மூன்று தடவைகள் வந்து கேட்டான்; பயமுறுத்தினான். அப்பால் ஒரு நாள் வந்து, “இன்று வரி தராவிட்டால் உன் வீட்டுப் பண்டங்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்வேன்” என்றான்.

கிழவிக்குக் கோபம் வந்து விட்டது.

“கொடுக்க முடிந்தால் இந்த வரியை முன்பே கொடுத்திருக்க மாட்டேனா? நீர் இப்படியெல்லாம் வந்து மிரட்டுகிறீரே! நானும் இவ்வளவு காலமாகப் பார்த்திருக்கிறேன். இப்படிக் கிட்டி கட்டி வரி தண்டுவதைக் கண்டதே இல்லை என்றாள்.

“உன்னுடைய ஒப்பாரியை எல்லாம் இப்போது விவரிக்க வேண்டாம். பணம் கொடுக்கிறாயா இல்லையா?” என்றான் கணக்குப் பிள்ளை.

“பணம் இருந்தால் தானே கொடுக்க? இவ்வளவு அதிகாரத்தை உனக்குக் கொடுத்தவர் யார்?” என்று கிழவி கேட்டாள்.

“ஏன்? நம்முடைய வெள்ளை மருது துரையே என்னிடம் வரி வாங்கச் சொன்னார்” என்றான் கணக்குப் பிள்ளை.