பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

75


7. உடலைக் குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்


உடல் உறுப்புக்களுக்கு உற்சாகமான உணர்வைத் தருவதற்கும், ஊட்டங்களை அதிகமாக்க உசுப்பி விடுவதற்கும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.

அதை வெறுமனே உடற்பயிற்சி என்று சொல்வது தவறு. அதை உடலழகுப் பயிற்சிகள் என்றும் சொல்ல வேண்டும். அதில் இன்னும் கொஞ்சம் ரசனைசேர்த்து உடல் அளவுப் பயிற்சி என்றும் சொல்லலாம். உடல் மெருகுப் பயிற்சி என்றும் சொல்லலாம்.

சாதாரண எடையுள்ள தேகமாகயிருந்தால் விருப்பப்படி ஓடலாம், தாண்டலாம், குதிக்கலாம். வேலைகளைச் செய்யலாம். கொஞ்சம் கூடுதலான எடையுடன் குண்டாக இருக்கிறபொழுது, நம்மனதில் வேகமிருந்தாலும், உடலால் மனம் போல இயங்க முடியாது. தேகமும் அதற்கு இடம் கொடுக்காது. கால்கள் தடுமாறும். உடம்புவலிக்கும். இதயத்துடிப்பு அதிகமாகும். நமக்குள்ளே ஒரு பயம் ஏற்படும்.

ஆகவே, உடற்பயிற்சியைப் பற்றி, இது உதவுகிற நண்பனைப்போல, எதிர்த்துத் தாக்குகிற பகைவனைப் போல அல்ல என்று உணருங்கள். சீராக உடற்பயிற்சி செய்தால், ஜோராக வாழலாம் என்ற நல்ல நம்பிக்கையை நெஞ்சிலே பதித்துக் கொண்டு நீங்கள் தேகப் பயிற்சியைத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.