பக்கம்:குதிரைச் சவாரி.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எப்போதும் முனுசாமியின் பக்கத்திலேயே நிற்பான். முனுசாமி ஏதாவது சொன்னால், மோஹனும் அவனுடன் சேர்ந்துகொண்டு பேசுவான்.

ஒரு நாள், முனுசாமி மடியை அவிழ்த்தான். அதிலிருந்து ஒரு பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். பிறகு, வெற்றிலையை எடுத்தான். அப்புறமும் மடியில் எதையோ தேடினன்; காணவில்லை. உடனே ஒருவரைப் பார்த்து, “உங்களிடம் சுண்ணாம்பு இருக்குமா?” என்று கேட்டான்.

“இல்லையே!” என்று கையை விரித்தார் அவர்.

உடனே மோஹன், “என்ன, சுண்ணாம்புதானே வேண்டும்? இதோ கொண்டுவருகிறேன்” என்று சொல்லி விட்டு வேக வேகமாக ஒடினான். சிறிது தூரத்திலிருந்த வெற்றிலைபாக்குக் கடைக்குச் சென்றான். கொஞ்சம் சுண்ணாம்பு வாங்கி வந்து முனுசாமியிடம் நீட்டினான்.

முனுசாமிக்கு அதிலிருந்து மோஹனிடத்தில் ஒரு பிரியம் ஏற்படலானது. தினமும் மோஹன் அங்கே வருவது முனுசாமிக்குத் தெரிந்ததுதான்! அன்று இரவு மணி ஏழு ஆனதும், வழக்கம் போல முனுசாமி குதிரை களுடன் புறப்படத் தயாரானான். அதுவரை மோஹனும் அங்கேயே நின்றான்.

முனுசாமி மோஹனைப் பார்த்ததும், “தம்பி, நீ ஏன் ஒரு நாளைக்குக்கூட என் குதிரைமேல் ஏறுவதில்லை?” என்று கேட்டான்.

“என்ன செய்வது? நானோ ஏழை. பணத்துக்கு எங்கே போவேன்? என் அப்பாவுக்கு 40 ரூபாய்தான் சம்பளம். அவர் சம்பாதிக்கிற பணம் சாப்பாட்டுக்கே...” என்று மோஹன் கூறி முடிப்பதற்குள்,

“அடடா, பாவம்! உனக்குக் குதிரைமேலே ஏறி, சவாரி செய்ய ஆசைதானே?” என்று பரிதாபத்துடன் கேட்டான் முனுசாமி.