பக்கம்:குதிரைச் சவாரி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கொண்டான். அப்போதும் அவன் மனத்தில் நிம்மதி இல்லை.

‘முனுசாமி நேற்றுக் கடற்கரைக்குச் சென்றிருப்பான். குதிரைகளையும் என்னையும் அங்கே காணாமல் என்ன செய்தானோ? ஒரு வேளை, வீட்டு எண் தெரியாததால்தான இன்னும் இங்கு வரவில்லையோ ?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போது, ‘டக்-டக்’ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.

“ஐயோ! முனுசாமி வந்துவிட்டானே!” என்று நடுங்கினான் மோஹன். பேசாமல் கண்களை இறுகமூடிக்கொண்டு தூங்குகிறவன் போலப் பாசாங்கு செய்தான்.

கதவைத் தட்டும் சத்தம் வர வர அதிகரித்தது. ஆனாலும், மோஹன் அசையவில்லை. சத்தம் பலமாகக் கேட்டதும், அடுப்பங்கரையில் இருந்த அம்மா ஒடி வந்தாள்.

“ஏண்டா நீ கதவைத் திறக்கப்படாதா ?...சரிதான். தூங்குகிறயாக்கும்” என்று சொல்லிக்கொண்டே கதவின் அருகே சென்றாள். “யாரது?” என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்தாள்.

அப்போது, மோஹன் மெதுவாகக் கண்களைத் திறந்து கதவுப்பக்கம் பார்த்தான். அங்கே முனுசாமி இல்லை! யாரோ ஒரு பையன் நின்றுகொண்டிருந்தான்.

‘இவன் யாராக இருக்கும்?’ என்று மோஹன் யோசிப்பதற்குள்,

“அம்மா, நான் ராமச்சந்திரன் செட்டி கடையிலிருந்து வருகிறேன். கடைப்பாக்கியை இந்த மாசம் பிறந்தவுடனே தருவதாகச் சொன்னீர்களாம். இன்னும் தம்படி தரவில்லை. எங்கள் முதலாளி கண்டிப்பாகக் கேட்டு வாங்கிவரச் சொன்னர்” என்று மளமளவென்று கூறி முடித்தான் அந்தப் பையன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குதிரைச்_சவாரி.pdf/20&oldid=496029" இலிருந்து மீள்விக்கப்பட்டது