பக்கம்:குதிரைச் சவாரி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“சரிதான், ஐயா ஆபீஸ் போயிருக்கிறார், சாயங்காலம் வந்ததும் சொல்கிறேன். கொண்டுவந்து கொடுப்பார்.” என்று பதில் சொன்னாள் அம்மா.

உடனே, அவன் போய்விட்டான். “அப்பாடா!” என்று உள்ளுர மகிழ்ச்சி அடைந்தான் மோஹன்.

ஆனாலும் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. அவனுக்கிருந்த பயம் அந்த மகிழ்ச்சியை அப்படியே விழுங்கிவிட்டது. படுத்தபடியே திரும்பவும் யோசனை செய்தான். இரவு நல்ல தூக்கம் இல்லாததால் சிறிது கண்மூடலானான்.

யாரோ கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கூர்ந்து கவனித்தான் மோஹன். உடனே, அவனுடைய உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அங்கு வந்தது சாட்சாத் குதிரைக்கார முனுசாமியேதான்! அவன் வந்ததும், மீசையை ந்ன்றாக முறுக்கிவிட்டுக்கொண்டான். அவன் கண்கள் அபாய விளக்கைப்போல் சிவப்பாக இருந்தன.

“ஐயா, மோஹன் என்கிற பையன் இங்குதானே இருக்கிறான்?” என்று அதிகாரத்துடன் கேட்டான் அவன்.

“ஆமாம். என்னப்பா விஷயம்?” என்று கேட்டார் மோஹனுடைய அப்பா.

“என்னவா என் குதிரைகள் இரண்டையும் அவனிடம் கொடுத்திருந்தேன். இப்போது குதிரைகளையும் காணோம் அவனையும் காணோம் எங்கே அவன் ?”

“என்னப்பா, குதிரையாவது: காணோமாவாது விளையாடுகிறாயா, என்ன?...அது என்ன குதிரை ? பொம்மைக் குதிரையா?”

“நாணா விளையாடுகிறேன் ? நீங்கள்தாம் விளையாடுகிறீர்கள். எங்கே அந்தப் பையன் ? கூப்பிட்டுக் கேளுங்கள், யார் விளையாடுவது என்று தெரியும்” - இப்படி ஆத்திரத்துடன் கூறினான் முனுசாமி.

19