பக்கம்:குதிரைச் சவாரி.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கிறீர்களா ? இப்போது குதிரைகள் இரண்டையும் தந்தால் தான் விடுவேன். இல்லாவிட்டால் குதிரை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டும்” என்று முனுசாமி கண்டிப்பாகக் கூறினான்.

“என்ன இரண்டுக்கும் இரண்டாயிரம் ரூபாயா ! அதற்கு எங்கே போகிறது ? இந்தச் சனியன் பிடித்த பயல் ஏன் குதிரைகளைப் பிடித்துப் போனான் ?...என்னவோ அப்பா, எனக்கு ஒன்றும் தெரியாது. குதிரைகளை நீ இந்தப் பையனிடம்தானே கொடுத்தாய் ? சரி, இவனை வேண்டுமானால் பிடித்துக்கொண்டு போ. பணம் கொடுக்க நான் எங்கே போவேன் ?” என்று கூறிவிட்டார் அப்பா.

“ஒஹோ, அப்படியா! சரி, இந்தப் பையனை இப்பொழுதே என்னோடு அனுப்பி வையுங்கள்.”

“நான் என்ன அனுப்புகிறது ? நீயே பிடித்துக் கொண்டு போ, இந்த நாசமாய்ப்போன பயலை”

“அப்படியா! சரி” என்று கூறிவிட்டு, முனுசாமி மோஹனைப் பிடித்து, ‘பரபர’ வென்று இழுத்தான்.

உடனே, “ஐயோ : அம்மா : அம்மா !” என்று கதறினான் மோஹன்.

“என்னடா மோஹன், என்ன உளறுகிருய் ? சொப்பனமா ?” என்று கேட்டாள் அம்மா.

அப்போதுதான் மோஹனுக்கு, தான் கண்மூடியதற்குப் பிறகு இதுவரை நடந்ததெல்லாம் வெறும் கனவு என்பது தெரிந்தது.

“ஒன்றுமில்லை அம்மா !” என்று கூறி அம்மாவை அனுப்பிவிட்டான்.

கனவிலே கண்டவற்றையெல்லாம் நினைக்க நினைக்க, அவனுக்குப் பயமாக இருந்தது. “கடவுளே, இப்படியெல்லாம் நடக்கக் கூடாது” என்று வேண்டிக்கொண்டான்