பக்கம்:குதிரைச் சவாரி.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இதற்கா இவ்வளவு பயம் ? என்னுடைய குதிரைகளை டில்லியில் கொண்டுபோய் விட்டாலும், அவை நேராக இங்கு வந்து சேர்ந்துவிடுமே ! நீ குதிரைகளை விட்டவுடனே, அவை. நேராக என்னைத் தேடிக்கொண்டு இந்த இடத்துக்கே வந்துவிட்டன. என்னே இங்கே காணாததால், வழக்கமாக நிற்கும் இடத்திலே என்னை எதிர்பார்த்துக் கொண்டே நின்றன. நான் வந்ததும், குதிரைகளைப் பார்த்தேன். ஆனால் உன்னைக் காணோம்! எங்கேயாவது போயிருப்பாய் என்று நினைத்தேன். இதுதானா விஷயம்! நன்றாகத்தான் பயந்தாய்” என்றான், முனுசாமி சிரித்துக் கொண்டே.

இவ்வளவு நேரம் இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவுக்கும் சிரிப்புத்தான் வந்தது. உடனே அவர், “மோஹன், இதனால்தான் நீ வீட்டுக்குள்ளேயே இருந்தாயோ ? கடற்கரைக்குத் தினமும் போய்ச் சலித்து விட்டதாம் காசைக் கொடுத்து, குதிரைச் சவாரி செய்ய வேண்டாமாம்! அடடே, பயத்தில் எப்படி எப்படியெல்லாம் சாமர்த்தியமாகப் புளுகியிருக்கிறாய்?” என்று கூறிக் கொண்டே, அவன் கன்னத்திலே மெதுவாக ஒரு தட்டுத் தட்டினார்.

பிறகு, “நடந்ததெல்லாம் சரிதான். இருந்தாலும் நீ குதிரைகள் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடனே, நேரே முனுசாமியிடம் போய்த் தகவல் சொல்லியிருக்க வேண்டாமோ? செய்த இந்தக் குற்றத்தை மறைக்க எவ்வளவு பொய் சொல்ல வேண்டியதாயிற்று ? நல்ல வேளை, குதிரைகள் கிடைத்துவிட்டன. இனிமேல் இந்த மாதிரி செய்யாதே. என்ன, சரிதானா ?” என்று அன்போடு புத்திமதி கூறினார் அப்பா.

“சின்னப் பிள்ளைதானே, ஏதோ பயத்தினால் இப்படி யெல்லாம் நடந்துவிட்டது. இனிமேல் ஒரு நாளும் இது போல் நடக்காது. என்ன மோஹன், அப்படித்தானே?”