பக்கம்:குதிரைச் சவாரி.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூறிவிட்டான் குதிரைக்கார முனுசாமி. பிறகு, “தம்பி, நீ இங்கே வா; தங்கச்சி, நீயும் வா” என்று இரண்டு குழந்தைகளைக் கையைக் காட்டிக் கூப்பிட்டான். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு முன் வந்தார்கள்.

“சரி, உங்களை நான் இப்போது ஏற்றிவிடப் போகிறேன்: துட்டு எங்கே?” என்று கேட்டான் முனுசாமி.

உடனே, அந்தப் பையனுடைய அப்பாவும் பெண்ணினுடைய அப்பாவும் முன்னால் வந்தார்கள். ஒவ்வொருவரும் இருபது காசை எடுத்து முனுசாமியிடம் நீட்டினார்கள். பணத்தை வாங்கி இடுப்பில் செருகிக்கொண்டான் முனுசாமி.

பிறகு, அந்தப் பையனையும் பெண்ணையும் தூக்கி, குதிரைமேல் வைத்தான். குதிரைகளைத் தட்டி, 'ஹை' என்றான். உடனே, அவை கிளம்பிவிட்டன.

அப்போது அந்தப் பெண்ணின் அப்பா, “சீதா, கெட்டியாய்ப் பிடித்துக்கொள், ஜாக்கிரதை” என்று எச்சரிக்கை கொடுத்தார்.

“அதெல்லாம் நீங்கள் பயப்படவே வேண்டாம். நம் முடைய குதிரை நல்ல குதிரை. ஆபத்தே வராது” என்று தைரியம் கூறினான் முனுசாமி.

இவ்வளவு நேரம் நடந்ததையெல்லாம் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த மோஹனுக்கு இப்போது தான் விஷயம் விளங்கியது.

‘நம்மிடமும் இருபது காசு இருந்தால் ......?’ என்று எண்ணலானான்.

ஆனால் அவனிடம் அப்போது ஒரு பைசாகூடக் கிடையாது! குதிரைகள் குழந்தைகளை ஏற்றிச் செல்வதையும், திரும்பி வருவதையும் வெகு நேரம் பார்த்துப் பார்த்து ஏங்கிக்கொண்டே நின்றான். சூரியன் மறைந்துவிட்டது.கூட அவனுக்குத் தெரியவில்லை.