பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டது. தேனிர் அருந்துபவர்கள் "கப் - சாசர்" பார்த்திருப்பீர்கள். கப்பில் தேனீர் சூடாக இருக்கும். "சாச"ரில் ஊற்றினால் சூடு ஆறிவிடும். ஆதலால், சூடான தேனிரைச் “சாச"ரில் ஊற்றிக் குடிப்பது அன்றாடக் காட்சி. சுருங்கியனவெல்லாம் துன்புறும்; அழியும். விரிந்தன வெல்லாம் வளரும்.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு".
(72)

உயர்ந்த அன்புநெறியில் நிற்பதுவே வாழ்க்கை. உயிர் உய்திக்கு அன்பு தேவை. அன்பு உள்ள இடத்திலேயே வாழ்வு இருக்கும் வாழ்வு சிறக்கும். அன்பு உயிரையும் உடலையும் இணைத்து வாழ்விக்கிறது.

அன்பு, இயக்கத்தன்மை உடையது. அன்பு, ஆற்றலுடையது. 'ஆற்றல் மிக்க அன்பு' என்று அப்பரடிகள் கூறுவார். ஆதலால் அன்பு செயற்பாட்டிலும், தியாகத்திலும் இடம்பிடித்து வாழ்கிறது.

அன்புநெறியில் நிற்க விரும்புபவர்கள், தங்களை நேசித்துக் கொள்வதில் அளவற்ற அக்கறை காட்டக் கூடாது. அன்புடையவர்கள் தங்களைக் கடைசியாகவே நேசிக்கத் தொடங்குவர். அன்பு என்பது செயற்பாட்டுக்குரிய வாய்ப்புக் கருதிக் காத்துக் கொண்டிருக்காது. பள்ளந்தாழ் உறுபுனல்போல, அன்பு செயல்களைச் செய்ய வலியச் சென்று வாய்ப்புக்களை நாடும் தேடிப் பிடிக்கும். இதுவே உயிர் உய்யும் நெறி; திருக்குறள் நெறி.

திருக்குறள் நெறி, உயிர்நிலை போற்றும் நெறி. உயிர்நிலையின் களம் அன்பு: உயிரின் உயிர்ப்பு அன்பு. அன்புடையராதலின் பயன் நல்லறிவு பெறுதல்; நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் தெளிந்து துணிதல் செயற்பாடுறுதல். இதுவே, திருக்குறள் நெறி சார்ந்த அறிவியல்.