பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7


வள்ளுவமும் மார்க்சியமும்


மனித உலகம் சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்து தனியுடைமைச் சமுதாயம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். காவல் என்ற பெயரில் வேலிகளும் சுவர்களும் முறையே தோன்றியிருக்க வேண்டும். வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பூர்வ காலத்தில் மனித குலத்தில் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பே நிலவி இருந்தது. அதுவே இயற்கை வழிப்பட்ட சமுதாயம். பிறகுதான் முறையே தனி உடைமைச் சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் என்ற அமைப்பு முறைகள் வளர்ந்து வந்துள்ளன.

நிலப்பிரபுத்துவ சமுதாயம் ஈன்றெடுத்த நஞ்சனைய தீண்டாமை மற்றும் சாதி, குலம் முதலிய இழிவுகள், பல முனைப் போராட்டங்களுக்குப் பிறகும் அகன்ற பாடில்லை. ஏன்? மானுடத்தைப் பற்றியுள்ள வறுமை, சாதிப் பிரிவினை முதலிய இழிவுகளை அரசியலுக்குத் துணையாகக் கொள்ளும் போக்கு அண்மையில் வளர்ந்து வந்திருப்பதை - வளர்ந்து வந்துகொண்டிருப்பதை மறுப்பது எளிதன்று. அதுவும் பண மதிப்பீட்டுச் சமுதாய அமைப்புத் தோன்றிய பிறகு மனிதம் மெள்ள மெள்ள இழிதன்மையை அடைந்து கொண்டு வருகிறது.