பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எங்கும் மனிதன் மதிக்கப்படுவதில்லை. மனிதனின் வளர்ச்சிக்குரிய பணிகள் நடப்பதில்லை. இலவசங்களே நடக்கின்றன! இலவசங்களால், தான தருமங்களால் உள்ளத்தில் ஏற்படும் ஊனங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஒருபுறம் உடல் ஊனமுற்றோருக்கு உதவிகள் பற்றிய ஆரவாரம்! நடப்பது என்ன? நமக்குத் தெரியாது. ஆனால், நாளும் மனித குலத்தில் பாதிப்பேர் நியாயவிலைக் கடைகளில் முன்னும், வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்னும், அரசு மருத்துவ மனைகளிலும், காவல் நிலையங்களிலும், வட்டிக் கடைகளின் முன்னும், கடவுள் சந்நிதிகளிலும் நின்று அவர்கள் தம் உள்ளம் ஊனப்படுவது பற்றி எத்தனை பேர் கவலைப்படுகின்றோம்.

மனிதன் வாழப் பிறந்தவன். வாழ்வது அவனது உரிமை! மனிதனை வாழவைக்கும் கடமையை நிறைவேற்றவே சமூகம் என்ற கூட்டமைப்பு - கூட்டு வாழ்க்கைமுறை தோன்றிற்று! ஆனால், இன்றோ சமூகம் மனிதனை வாழ வைப்பதில்லை! அவனுடைய தோள்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு அவனுக்கு மேலும் சுமையாக இருக்கிறது. சமயம் மானுடத்தை வாழ்விக்கவே தோன்றியது. கடவுள் சாட்சியாகச் சமயத்தின் முதற் கடமை மானுடத்தை வாழ வைப்பதுதான்! ஆனால், மதங்களோ கடவுளைக் காப்பாற்றப் போரிட்டுக் கொண்டுள்ளன. மதங்கள் மனிதத்தை மறந்தே விட்டன. மதத்தின்பின் மனிதனை வாழ்விக்க, அவனுடைய உரிமைகளைப் பாதுக்காக அரசு தோன்றியது. ஆனால் இன்றைய அரசுகள் அதிகாரத்தையே மையமாகக் கொண்டுள்ளன. தேர்தல் என்ற ஒன்று வந்து தொலைப்பதால் ஆள்கின்றவர்களுக்கு மனிதனைப் பற்றிய கவலை கொஞ்சம் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பயன்தரத் தக்கவாறு இல்லை .

இந்தச் சூழ்நிலையில் மானுடம் இன்னமும் வறுமையிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் விடுதலை பெறவில்லை. அச்சத்திலிருந்தும் விடுதலை பெறவில்லை. ஏன்? தனி மனித