பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உலகத்திற்கு முதல், அவ்வளவுதான்! அவன் படைப்பாளியும் அல்ல. மானுடத்தின் வாழ்வியல் அமைவுகளுக்குக் கடவுள் பொறுப்பேற்பதில்லை; பொறுப்பேற்கவும் மாட்டார். இந்த வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வது மனிதன் பொறுப்பு; கடமையுமாகும்.

மார்க்சியம் உலகம் தழீஇயது. ஒவ்வொரு நாடும் தற்சார்புடையதாக விளங்கவேண்டும். நாடுகளுக்கிடையிலும் சுரண்டல் கூடாது என்று கூறுகிறது. “பன்னாட்டு மூலதனம்” என்ற பெயரில் சில நாடுகளின் பொருளாதார ஆதிபத்தியம் வளர்வது மார்க்சியத்திற்கு உடன்பாடன்று. திருக்குறளும் "நாடென்ப நாடா வளத்தன" என்று கூறுகிறது. இன்று நமது பாரதத்தைப் பன்னாட்டு மூலதனம் விழுங்கப் பார்க்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனி உடைமைகளாக்கப்படுகின்றன. நாட்டையே சுரண்டும் தீய குணம் பரவி வருகிறது. ‘காட்’ ஒப்பந்தம் நம்மை மேலும் பலவீனமாக்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பாரதநாட்டு மக்கள் விழித்தெழ வேண்டும்.

பாவேந்தன் கூறியபடி நாம் - மக்கள் இந்தப் புவியை நடத்த வேண்டும்! பொதுவில் நடத்தவேண்டும்! புவியை நடத்துதல் எளிய பணியன்று. புவியை நடத்த முதலில், கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்க்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான உலகத்தை நோக்கி இந்த உலகத்தை நடத்த வேண்டும். எட்டுத் திசையும் சென்று பொதுவுடைமைக் கொள்கையைச் சேர்க்க வேண்டும். அதைப் புனிதமுடன் உயிர் போலக் காக்கவேண்டும். சோவியத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை-சரிவுகளைப் படிப்பினையாக ஏற்றுக்கொண்டு மார்க்சியத்தை வாழ்வாக்க வேண்டும். மார்க்சியம் தோற்காது! மார்க்சியம் தோற்றால் மானுடத்திற்கு எதிர்காலம் ஏது? மார்க்சியம் தோற்க அனுமதிக்கமாட்டோம். வள்ளுவமும் மார்க்சியமும் மலர்க.