பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பின்பற்றத்தக்க சிறப்புடைய இலக்கியம். "நூல்கள் கற்கும் முயற்சியைவிட எந்த நூலைக் 'கற்பது? என்று தேர்ந்தெடுப்பதில் வாழ்க்கையில் வெற்றிக்குரிய பகுதி மிகுதியும் அமைந்துவிடுகிறது" "How long most people would look at the best book before they would give the price of a large turbot for it" - என்கிறார் ரஸ்கின். இங்ஙனம் இந்த இலக்கிய வரையறைக்கேற்றவாறு சிறந்து விளங்கும் நூல் திருக்குறள். திருக்குறள், கடவுளை நம்புகிறது; ஆனால் கடவுளுக்காகச் செய்யப்பெற்றதன்று. திருக்குறள் மனிதனை வளர்ப்பதற்காக மனிதனையே மையமாகக் கொண்டு செய்யப்பெற்ற நூல். மனிதராகப் பிறந்தோர் பேசுகிற வேறு எம்மொழியிலும் திருக்குறளைப் போன்றதோர் வாழ்க்கை நூல் இதுவரையில் தோன்றவில்லை.

வாழ்வாங்கு வாழ்தல்

வாழ்க்கை என்பது நோக்குடையது; பயனுடையது. வாழ்க்கை என்பது தற்செயலாக வந்த ஒன்றன்று. அது தற்செயலாக நீரிற் குமிழிபோல மறைந்து விடுவதுமில்லை . வாழ்க்கைக்கு அளப்பரிய நோக்கங்கள் உண்டு. வாழ்தல் என்பது எளிதன்று. வாழ்வாங்கு வாழ்தல் அருமையுடைய முயற்சி. வாழ்க்கையில் வெற்றி பெறுவோர் கோடியில் ஒருவரே, மற்றவர் வாழ்க்கை பாழுக்கிறைத்த நீரைப் போலப் பாழாகிறது. சிலர் வாழ்க்கை , பாழாவது மட்டுமின்றி மற்றவர்களுக்குத் துன்பமும் பழியும் தருவது உண்டு. வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப்பெற்ற மாளிகையன்று. வினாடிக்கு வினாடி எண்ணங்கள் என்ற கற்களை அடுக்கி, ஊக்கம் என்ற சாந்து கூட்டி, அன்பு என்ற நீரில் கலவை செய்து, ஆள்வினையென்ற கொற்றாள் துணைசெய்யக் கட்டி முடிக்கப்பெறும் மாளிகையாகும். ஆதலால் வாழ்க்கையில் அதிகக்கவனம் தேவை. வாழ்க்கை, நமக்குரிய ஒவ்வொரு வினாடியும் நாம் பயன்படுத்தும் முறையினைப்