பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 105


பொறுத்து ஆக்கத்தினை அல்லது அழிவினைத் தரும். உலகில் எல்லாப் பொருள்களுக்கும் காலத்துக்குமிடையே ஓயாத இழுபறிப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போரில் காலத்தை வெற்றி கொள்பவர்கள் ஆயிரத்தில் ஒருவரே! காலம், வெற்றி பெறுதலே மிகுதி. காலம் மானுடச் சாதியை வெற்றி பெற்றுவிட்டால் மூப்பு, நோய், அழிவு ஆகிய முத்திரைகளைப் பொறிக்கும். மனிதன் விழிப்பாக இருந்து காலத்தைப் பயன்படுத்தி வெற்றிகொண்டால் ஆக்கம், இன்பம், புகழ் என்ற முத்திரைகளைக் காலத்தின்மீது பொறிப்பான். ஆதலால் வாழ்க்கையில் வெற்றிக்கு முதல் தகுதி காலத்தைப் போற்றிப் பயன்படுத்திக்கொள்ளுத்ல்.

அறிவு என்பது எது?

உயிர், அறிவுப்பொருள்; அறிதற்குரியது; அறிவு மயமாய் விளங்குதற்குரியது. ஆயினும் அறியாமையைத் தழுவிக்கிடக்கிறது. வாழ்வியல் வெற்றிக்கு முதல் தேவை, அறிவு. அறிவுக்குப் பின்தான் பிற தேவைகள்.


"அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்"

(430)

என்று பேசுகிறது, திருக்குறள். எது அறிவு? அறிவுடைமைக்கு அடையாளம் என்ன? தெளிவாக உணரவேண்டும். தமிழக வரலாற்றுப் போக்கைக் கூர்ந்து நோக்கினால் நம்மில் பலருக்கு நேற்றும் இன்றும் அறிவே இல்லையோ என்று ஐயப்படத்தக்க அளவுக்கு வரலாற்று நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. இன்றைய தமிழகத்தின் நிலையும் அதை உறுதிப்படுத்துகிறது. விவரங்கள், தகவல்கள் தெரிந்து வைத்திருப்பது அறிவன்று. நிரந்தினிது சொல்லும் திறமை பெறுதல் அறிவன்று. அவற்றிலும் சிறந்த மாட்சிமையுடைய உயரிய பணி ஒன்றுளது. அது என்ன? மனித உலகம் துன்பத்திலிருந்து காக்கப்பெற வேண்டும். நேற்றும் துன்பம், இன்றும் துன்பம்; நேற்றும் தோல்விகள், இன்றும்