பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருக்குறள் ☆ 107


என்பது குறள். வாழ்க்கையென்பது, குறைகள் அவ்வழிப்பட்ட குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று நிறைபெறுதல் என்று கண்டோம். அதற்கு அறிவு தேவை. அறிவு எது என்றும் கண்டோம். ஆனால்அந்த அறிவினைப் பெறுதல் எங்ஙனம்? கற்பதன் மூலம் மட்டும் அறிவு வராது என்று முன்னர்க் கண்டோம். அறிவின்னப் பெறுவதற்குக் கற்பதும் ஒரு வாயிலாக அமையும் ஆனாலும் கற்பதனாலேயே அறிவுடையராகி விடமுடியாது. உலகப் பரப்பு அகலமானது. அனுபவங்களுக்குரிய பரப்பும் அகலமானது. உலகம் முழுதும் அறிஞர்களும் பரவிக் கிடக்கின்றனர். உலகத்தில் தோன்றும் எல்லா நூல்களையும் ஒருவர் கற்று வல்லவராதல் அரிது. அதனால் கற்கும் வாய்ப்பை இழந்தவர்கள் கேள்வி முறையிலாவது அறிவைப் பெற முயற்சி செய்ய வேண்டும். கற்றல் கேட்டல் இரண்டும் அறிவினைப் பெறுதற்குரிய தொடக்க வாயில்கள். ஆனாலும் கற்ற, கேட்ட கருத்துக்கள் அறிவாக மாறி வாழ்க்கைக்குத் துணை செய்யவேண்டுமானால், அந்தக் கருத்துக்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு கருத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் பொழுதுதான் அது விஞ்ஞானமாக - அறிவாக உருமாற்றம் பெறுகிறது. இத்தகைய அறிவையுடையோரே எல்லாம் உடையார். எத்தனையோ பேர் கற்று, கேட்டு நம்புகின்ற கருத்துக்களை நடைமுறைப்படுத்த முடியாமல்-வாழ்க்கையில் காட்ட முடியாமல் தத்தளிக்கின்றனர்; தோற்கின்றனர். இத்தகையோர் வாழ்க்கையைப் பார்த்துத்தான், "கலைமகளுக்கும் திருமகளுக்கும், சண்டை, கலைமகளுக்கும் வெற்றித் திருமகளுக்கும் சண்டை; ஒன்றோடொன்று பொருந்தாது” என்ற வழக்குப் பிறந்தது போலும். ஆதலால், "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்ற வள்ளுவத்தின்படி கற்ற, கேட்ட கருத்துக்களை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சோதனைப்படுத்திப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் வள்ளுவம் நம்முடைய வாழ்க்கையில் அறிவாக இடம் பெறும்.