பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வாழ்க்கையில் அன்றாடம் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளைச் சந்திக்கின்றோம். அவற்றில் இன்பந் தருபவையும் இருந்திருக்கலாம்; துன்பம் தருபவையும் இருந்திருக்கலாம். அவைகளை எண்ணிக் கவலைப்பட்டுப் பன்னிப் பன்னிப் பேசுதல் பலருடைய வழக்கம். நேற்று நடந்தது, நடைபெறக் கூடாத ஒன்று தான்! ஆயினும் என்ன செய்வது? நடந்தது நடந்ததுதான்! இனி, நேற்று நடந்ததைத் தவிர்க்க முடியுமா? கவலைப்பட்டு அழுவதில் என்ன பயன் சென்றதை மறந்து இனி வருவதை எதிர்நோக்க வேண்டும்.

"சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடிஇன்புற் றிருந்து வாழ்வீர்'
அஃதன்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா”

(பாரதியார் கவிதைகள், சுயசரிதை: 32-33-1)

சென்றதை நினைந்து கவலைப்பட்டு அழுதுகொண்டிருந்தால் எதிர்காலமும் வருந்துதலுக் குரியதாகிவிடுகிறது. சிறப்புடைய நிகழ்காலமே சிறப்புடைய எதிர்காலத்தைத் தோற்றுவிக்கும். ஆதலால், சென்ற காலத்தை நினைந்து வருந்தாது, சென்ற காலப் படிப்பினைகளை ஏற்று அறிவாக மாற்றிக்கொண்டு இனி எதிர்வருங் காலத்திற்கு உரியனவற்றை நாடிச் செய்ய வேண்டும். அதுவே சரியான வாழ்க்கைமுறை,

"அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்”
(427)

என்று திருக்குறள் பேசுகிறது.