பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 109


ஆள்வினை

வாழ்க்கையின் உயிர்ப்புடைய செயல் தொழிற்படுதல். அறிவு, அன்பு, ஈதல், ஒப்புரவறிதல், சான்றாண்மை, நாகரிகம், பண்பாடு முதலிய பல்வேறு நற்பண்புகளையம் இயக்கிச் செயற்படுத்தித் தாமும் வாழ்ந்து உலகையும் வாழ்விக்கச் சிறந்த தொழில்திறன் தேவை. உழைப்பு என்பது உயிரின் இயற்கை உழைக்காது சோம்பியிருத்தலே செயற்கை. அயர்விலாது உழைத்தல் நல்வாழ்வு, உழைத்திடாது சோம்பியிருத்தல் நோய். உழைத்தல் தெய்வத் தன்மையுடையது. உழைப்பே உலகை இயக்கும் ஒப்பற்ற சக்தி. மனித குல வரலாற்றின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைவது உழைப்பேயாம். உழைக்கும் சக்தி என்றும் எப்பொழுதும் செலாவணியாகக் கூடிய ஒப்பற்ற செல்வம்; உடைமை. உலகில் புதிய புதிய புனைவுகளும் படைப்புகளும் உழைப்பின் படைப்பு அல்லவா? அதனால் தான் திருக்குறள்,

"உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை

நில்லாது நீங்கி விடும்"
(592)

என்று அறுதியிட்டுக் கூறுகிறது.

ஆக்கம், மந்திரத்தில் வருவதன்று. ஆக்கத்திற்குரிய திருமகள் வந்து சேர்தலுக்குரிய முகவரியை அடையாளம் காட்டிவிட்டால் போதும். ஆக்கம் வீடு தேடி வந்து சேரும். அது என்ன முகவரி: அஞ்சலக முகவரியா? அதுதான் இன்று எல்லாருக்கும் இருக்கிறதே. வேறோர் அடையாளமுமல்ல! இவன் ஊக்கம் உடையவன். இவனை நாம் சென்றடைந்தால் நமக்குரிய விலையைக் கொடுப்பான் என்ற அடையாளத்தைக் காட்டவேண்டும்.

"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை"
(594)