பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது திருக்குறள். வள்ளுவம் பிறந்த தமிழகத்தில் இன்று உழைப்பாற்றல் முழுமையான அளவுக்கு வளர்ந்து பயன்படவில்லை. அதுவும் படித்தவர்கள் மத்தியில் முழுமையாக இயங்கவில்லை. வாழ்க்கையில் ஏமாற்றங்களும் மனநிறைவின்மைகளும் மலிந்து வருகின்றன. இன்றைக்குக் கடவுள் சந்நிதியில் பிச்சைக்காரர்களே மிகுதியும் கூடுகின்றனர். வள்ளுவம் ஊக்க சக்தியினை வழங்கும் ஊற்று. அறிவுக்கு ஒத்துவராத மூடநம்பிக்கைகளில் முடம்பட்டு மனிதகுலம் அழிவதை வள்ளுவம் விரும்பவில்லை. அது நாள்தோறும் புதிய வரலாறு படைக்கத் தூண்டுகிறது. ஆனாலும் இன்று உழைப்பாளர்கள் இல்லையா? என்று கேட்கலாம். ஏன்? நம்முடைய நாட்டுத் தலைவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள், "கடுமையாக உழைத்தால் முன்னேறலாம்” என்று, வேறு சிலர் - வசதிவாய்ப்புகளை நிறையப் பெற்றவர்கள் - உழைப்பைக் குறைந்த விலைக்கு வாங்கி வளர்பவர்கள் முணுமுணுக்கின்றனர். சமுதாயத்தின் கடைமட்ட உழைப்பாளிகள் முன்போல வேலை செய்வதில்லையாம். நிறையக் கூலி கேட்கிறார்களாம், அதனால் தான் நாட்டில் வறுமை வந்துவிட்டதாம். சமுதாய வீதியில் எங்கு வேண்டுமானாலும் கை விளக்கை எடுத்துக் கொண்டு போய்த் தேடுங்கள்! இன்று வறுமையில் வாடுபவர்கள் உழைக்காதவர்கள்தானா? என்று பாருங்கள்! மனச்சாட்சிக்கும் கொஞ்சம் வேலை கொடுங்கள்! இந்த அவலநிலை ஏன்? வெறும் சோற்றுக்காக நாள்தோறும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆண்டு முழுதும் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கிறது. அந்த உழைக்கும் வர்க்கத்தினிடத்தில் இலக்கியங்களை எடுத்துச் சென்றதுண்டா ? கடவுள் நெறியை எடுத்துச் சென்றதுண்டா? இல்லை; திட்டங்கள்தான் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றனவா? யாதொன்றும் நடைபெறவில்லை. அத்தகைய அதிசயங்கள். இப்போதைக்கு இந்த நாட்டில் நடக்காது; நடக்கப்போவதுமில்லை.