பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எவ்வளவு ஆற்றல்! கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்கிறது! “தேவர்கோ அறியாத தேவதேவ” னையும் தெருவில் நடமாட வைக்கிறது. அன்புத் தேவதையின் முன்னே ஆதிக்கச் சக்திகள், ஆதிக்க அரசுகள் நிற்கமுடியா. பணத்தாசை முதலியனவும் அன்புத் தேவதையின் பிரவேசத்தால் மாறும். மண் குளிர மனித குலம் தழைக்க அன்பின் ஊற்று தடையின்றிப் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடவேண்டும். இன்று 'தடையிலா அன்பு இந்த உலகத்திற்குத் தேவை. இத்தகைய உயரிய அன்பியலை வாழ்வியலில் 'உயிர் நிலை'யாகக் காட்டுகிறது வள்ளுவம்.

உயிர் எங்கிருக்கிறது? சிலர் உடம்பில் தேடுவர், உடம்பில் இந்த இடத்தில் இருக்கிறது என்பர். அஃது யார்க்கு? உடல் வாழ்க்கை மட்டுமே வாழ்பவர்க்கு! சிலருக்கு உயிர் பணத்தில் இருக்கும். பணத்திற்கு இழப்பு வந்தால உயிர் பிரியும். அய்யோ ‘பாவம்' மனிதன் பணத்தைப் படைத்தான், அவன் படைத்த பணமே அவனுக்கு ஆண்டவனாகி அவனை ஆட்டிப்படைக்கிறது. அவன் உயிரையும் கொள்ளை கொள்கிறது என்றால் என்னே இழிநிலை? இவ்விரண்டு நிலையினரும் இழி மக்கள். வேறு சிலருக்கு மானத்தில், மரியாதையில் உயிர் நிலை இருக்கும். இது நல்லதே. ஆனாலும் இழந்த மானத்தைத் திரும்பப் பெறாமல் இறப்பது, வாழ்க்கையின் நோக்கத்தை முறியடிப்பதாகும். ஆதலால் தவறில்லையாயினும் இதனைப் பாராட்ட முடியாது. காதலில், நட்பில், கடமையாற்றுவதில் உயிர்நிலை வைத்துப் போற்றுவோர் நம்மால் போற்றுதற்குரியோர். காதலில் உயிர் நிலை வைத்திருந்த பாண்டிமா தேவியும், நட்பில் உயிர்நிலை வைத்திருந்த பிசிராந்தையாரும், முறை வழங்கும் அரசுக்கடமையில் உயிர்வைத்திருந்த பாண்டியன் நெடுஞ்செழியனும் வானும், நிலனும், நீரும், தீயும், வளியும் உள்ளளவும் நினைந்து நினைந்து போற்றப்படுவர். ஆம்! அவீர்கள் - 'வாழ்வதற்காக வாழவில்லை; அன்பிற்காகவே