பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 113


வாழ்ந்தார்கள் கடமைக்காகவே வாழ்ந்தார்கள்; அவற்றை இயற்ற இயலாதபொழுது மாறாக உயிரை விலை கொடுத் தார்கள். வள்ளுவம் இத்தகைய அன்பினையே போற்றுகிறது.

"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு" (30)

எவ்வளவு கடுமையாக அன்பின்மையை வள்ளுவம் விமர்ச்சிக்கிறது என்பதை அறிதல் கடமை. ஒருவர்க்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை அவர் சுவாசிப்பதிலிருந்து நம்ப வள்ளுவம் தயாராயில்லை. அவன் வாழ்க்கையில் அன்பின் விளக்கமிருந்தால் தான் அவனுக்கு உயிர் உண்டாம். இல்லையானால் உயிரற்ற உடம்பு ஒன்று உலாவருகிறது என்று வள்ளுவம் கூறுகிறது. அது மட்டுமா? உயிர், உடலோடு தொடர்புகொண்டு பிறந்ததே அன்பு செய்தற்குத்தானாம். உடலோடு கூடிய உயிர் அன்பு செய்தல் என்பது தான் வழக்கம். அது மாறியிருந்தால் வழக்கமில்லாத ஒன்று.

"அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு" (73

என்று வள்ளுவம் அன்பியல் வாழ்க்கையை இயல்பு ஆக்குகிறது: வழக்கம் ஆக்குகிறது. அன்பு எத்தகையது? வாயினால் 'அன்பு அன்பு என்று உச்சரிப்பது அன்பாகுமா? அன்பினைப்பற்றி ஆயிரம் பாடல்கள் பாடி அரங்கேற்றிவிட்டால் அது அன்பாகுமா? பட்டி மண்டபங்களில் 'அன்பே உயரியது என்று உரக்கத் தீர்ப்புக் கூறினால் அன்பாகிவிடுமா? ஆகாது! வாழும் மானிடச் சந்தையில் அன்பை அடையாளம் கண்டு கொள்ள வள்ளுவம் வழி காட்டுகிறது. அன்பிற்கு உருவம் இல்லை. அன்பைக் காண முடியாது. அன்பு "குடத்துள் விளக்கும் தடற்றுள் வாளும் போல இதுதான் அன்பு என்று போதத் திறந்து காட்டலாகாது” என்று கூறியவரும் உண்டு. ஆனால். தி.8.