பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வள்ளுவம் அன்பிற்கு உருவம் காட்டுகிறது. அதைக் காணமுடியும் என்றும் கூறுகிறது, வள்ளுவம் அன்பிற்குத் தந்த உருவம் என்ன? அடையாளம் என்ன? தனக்கு நெருங்கிய கேண்மையுடையாருக்கு யாதானும் இடையூறு ஒன்றுற்றபொழுது அவ்விடர் தமக்கே வந்துற்றது போல நினைந்து வருந்தி யாருடைய கண்கள் கண்ணீரைச் சிந்துகின்றனவோ- அவர்களுக்கு அன்புண்டு. அக் கண்ணீரே அன்பின் வடிவம்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்” (71)

என்ற வள்ளுவம் காட்டும் அன்பியல் நமது வாழ்க்கையில் துறைதோறும் பொருந்துவதாக.

இன்று மனிதகுலத்தைப் பிடித்திருக்கும் பீடைகளுக்கு எல்லாம் இந்த அன்பு நெறி மூலம்தான் முடிவுகாண முடியும். அன்பு சில பொழுது இயங்கும்; செயற்படும். ஆனாலும் வணிகப் பாங்கில் தன்னயப் புணர்வுடன், தற்காப் புணர்வுடன் இயங்கும். இது ஒரோ வழி இருபாலும் பயன் விளைவிக்குமாயின் அன்பு, முதிர்ந்த அன்பு. பழுத்த அன்பு யாதெனில். தன் னயப்பின்றி, தற்காப்புணர்வின்றி இடர்கள் பல வரினும் தன்னையே அழித்துக்கொண்டு மற்றவர்க்கு அன்பு காட்டுவது தான்! இதனை

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு" (குறள் 72)

என்று குறள் விளக்குகிறது.

இத்தகைய தூய அன்பியல் வையகத்தில் வாழ்வு நெறியாக மலரவேண்டும்.