பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தீமைகளைப் பாவி என்று உருவகம் செய்கிறார்; ஒன்று வறுமை; பிறிதொன்று அழுக்காறு. இவ்விரண்டுக்கும் கூடத் தொடர்பு இருக்கிறது. அழுக்காறே வறுமையையும் வழங்கும்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்" (168)

அழுக்காறு, நன்னெறியில் மனத்தைச் செலுத்தாது; மற்றவர் பெற்றிருப்பதைத் தாமும் பெறும் முயற்சியில் வழி நடக்காது; தூண்டித் தொழிற்படுத்தாது. அதற்கு மாறாக மற்றவர்கள் பெற்று இருப்பதற்குக் களங்கம் கற்பிக்கவும், அவற்றை அவர்கள் இழப்பதற்குரிய, தீமைகளைச் செய்யவும்தான் அழுக்காறு தொழிற்படுத்தும். மற்றவர் கல்வியில் சிறந்திருந்தால் தானும் சிறக்க வேண்டுமென்ற உணர்வை வழங்காது. மற்றவர் பெற்றிருக்கிற கல்வித் திறனை அற்பப்படுத்தியும், குற்றங்கள் கண்டும் தூற்றவே மனம் வரும். அதோடு அழுக்காறு தனித்து வருவதில்லை. அதற்கொரு படையே உண்டு. அழுக்காற்றின் முதல் படை அவா, உரிய தகுதியில்லாமலும், அத்தகுதியினைப் பெறாமலும் ஒன்றைப் பெற விரும்புவது அவா. அந்த அவா கூடத் தனக்குத் தேவை தேவையென்று அவாவுது. தெளிவாகக் கூர்ந்து நோக்கின் இவர்களுக்குத் தேவையும் இருக்காது. அவா இருந்தால் போதுமா? அவாவை அடைதற்குத் தகுதி வேண்டாமா? தகுதியின்மையாலும், தகுதியைப் பெறும் முயற்சியின்மையாலும் அவாவை அடைய இயலாது. உடன், வெகுளி வரும். வெகுளி வெடிச் சத்தங்களுடன் கேட்பதற்கு இயலாத, இனியன அல்லாத, இனியன தர இயலாத கடுஞ்சொற்களைக் கொட்டும். ஆதலால் அழுக்காறு தீது! தீது! இன்று எங்கும் அழுக்காறு, அலங்கார நடை நடப்பதுபோல் தெரிகிறது. தெருவில் விளையாடும் பாப்பாவின் கன்னத்தில் கறுப்புப் பொட்டு! புதியதாகக் கட்டும் வீட்டின் முகப்பில் கரும்புள்ளிகள் இட்ட பூசணிக்காய் தொங்குதல்: வைக்கோல் மனிதன் நிற்றல்! காய்த்துக் குலுங்கும் தோட்டத்தில் கறும்புள்ளி செம்புள்ளி