பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முயற்சி களில்தான் தீமை அகல வேண்டும். நல்லொழுக்கங்களை மேற்கொண் டொழுகுவதன் மூலம்தான் தீயொழுக்கத்தைத் தவிர்க்க முடியும். நல்லொழுக்க நெறிகள் பலவற்றை வள்ளுவம் முறைப்படுத்திக் காட்டுகிறது. அவை ஒன்றற்கொன்று நெருங்கிய தொடர்புடையன. ஒன்றற்கு ஒன்று வாயிலாக அமைவன, அரண் செய்வன. இத்தகைய ஒழுக்க நெறிகள் யாவும் வாழ்க்கையில் பொருந்தி அமைகிறபோதுதான் வாழ்க்கை வளமும் பொலிவும் உடையதாக அமையும்.

திருக்குறள் கூறும் ஒழுக்க நெறிகளில் யாதொன்றிலாது போனாலும் வாழ்க்கை முழுமையுறாது. அதுமட்டுமின்றி மற்ற நெறிகளால் பெற்ற பயன்களை அடைய முடியாமற் போனாலும் போகும். ஆதலால் வள்ளுவத்தின் ஒழுக்க நெறிகள் உறுதி பெற்றால் வாழ்வு சிறக்கும்; வையகம் பயனுறும். வள்ளுவம் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு விரிந்த பொருளைக் கண்டது; காட்டுகிறது. ஒழுக்க நூல் ஆசிரியர்களுள் முதன் முதலாக "உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலும் ஒழுக்கம்” என்று எடுத்துக்காட்டியவர் திருவள்ளுவரே. சிலர் தன்னளவில் சூதாடாதவராக - கள்ளுண்ணாதவராக - களவு செய்யாதவராக இருப்பர்; ஆனால் அவரிடம் இனியவை கூறல், ஒப்புரவறிதல் ஆகிய நல்லொழுக்கங்கள் இல்லாமற் போகும். ஒரு மனிதனின் ஒழுக்க நெஞ்சத்தை உணர்த்துவது இனியவை கூறுதலும் ஒப்புரவு மேற்கொண்டு ஒழுகுதலும் தானே! ஆதலால் வள்ளுவத்தின் வழியில் ஒழுக்கெெநறிக் கற்களை அடுக்கி, வாழ்க்கை என்ற மாளிகையை எழிலுடையதாக அமைப்போமாக. பலரோடு பழகுதல், அவர் காலத்தில் வாழும் சமுதாயத்தின் உணர்வுகளை, தேவைகளை, அறிந்து கொள்ளுதல் ஒழுக்க வாழ்க்கையின் மணி முடியாகும், இதனை வள்ளுவம்,

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்" (140)