பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காமற்கூட இருக்க முடியும், நட்புச் செய்யாமல் இருக்க முடியாது" என்று வாழ்க்கை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒருவர் வாழ்க்கை முற்றாகச் சிறப்புற்று விளங்கிச் செயற்கரியன செய்ய நட்பே தேவை. அதனாலன்றோ வள்ளுவம்,

"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு"
(731)

என்கிறது. செயற்கரிய யாவுள? என்று வினாக் கேட்டு, நட்பே என்று முடித்துக் காட்டுகிறது. நட்பு உருவாக்கப் பெறுவது, பழக்கங்களில் உருவாவது. அஃது இயற்கையில் அமைவதன்று. நட்பமைவுக்கு, இயற்கைத் தேவை எதுவுமில்லை. ஆனால் வாழ்க்கையில் முதலில் பெறுவது ஓடிவிளையாடும் பருவத்திலிருந்து நாடி நாடிப் பெற்று வளர்ப்பது நட்பேயாம். இயற்கைத் தேவையின் பாற்பட்ட உறவுகள் இருபாலின் தேவைகருதி நீடிக்கலாம். அவற்றில் முறிவுகள் ஏற்படின் இருபாலரின் வாழ்க்கையும் பாதிக்கும். ஆனால் நட்பு அத்தகையதன்று. நட்பிற்குத் தேவை கிடையாது. ஆனால் இலட்சியங்கள் உண்டு. நட்பு, உடனிருந்து ஒரு தட்டில் உண்டு சிரித்துப் பேசிப் பழகினால்தான் வளரும் என்பதில்லை. நட்பின் வளர்ச்சிக்குக் காலம் தடையில்லை; இடம் தடையில்லை; இன்பமோ துன்பமோ தடையில்லை.

"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்”
(785)

அந்த ஒப்பரிய அருள்நலம் சான்ற நட்பு நெறி வளர்க! வளர்க! வாழ்க! வாழ்க!

காதல் வாழ்க்கை

வாழ்க்கையின் வளர்ச்சிக்கு இரண்டாவதாக அமையும் உறுப்பு, காதல் மனைவி. நட்பிற்குப்பின்தான் காதல். இடம் காலம் வரிசையில் மட்டுமன்று; அமைவும்