பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காதல் தோன்றி மறைவதன்று இடையீடின்றி வளர்வது; உயிரில் கலந்து சிறந்து விளங்குவது; பிறப்பு இறப்பைக் கடந்தும் தொடர்வது பிரிவிலாதது. பிரிவு நேரிட்டபோதும் பிரியாமல் நினைவில் உணர்வில் கலந்து கரைந்து வாழ்வது காதல்.

"இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள்”
(1315)

என்பது குறள். காதல் வாழ்க்கை நினைந்து பார்த்தற்குரிய தன்று. காரணம் ஆங்கு மறப்பு இல்லை. இத்தகைய உயர்ந்த காதல் நெறியில் நழுவாமல் வாழ்ந்தால் மணவிலக்கு, மறுமணம், பெண்ணின் உரிமை போன்ற பேச்சுகளுக்கு இடம் வந்திருக்காது. வள்ளுவர் கூறும் காதல் வாழ்க்கை தடம் புரண்டு, கலியாணங்களாக மாறி வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு உடைமைகளுள் பெண்ணும் ஒன்றாகி, அனைத்து உரிமை நலங்களையும் அவள் இழந்தபிறகு வள்ளுவத்திற்கு மாறான குரல்கள் இன்று ஒலிக்கின்றன. காதல் வாழ்க்கையில் தலைவனும் தலைவியும் பிரிக்கப்படாத உரிமையுடையவர்கள்; உறவுடையவர்கள்; நலமுடையவர்கள். இதனை விளக்க வள்ளுவம் எடுத்துக்காட்டியுள்ள உவமை நினைந்து நினைந்து இன்புறத்தக்கது.

"உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு"
(1122)

உடம்பு - உயிர் இணைப்பு பிரித்தற்கு இயலாதது. உடம்பின்றேல் உயிர்க்கு இயக்கமில்லை; துய்ப்பில்லை. ஆதலால் உடம்பும் உயிருமாக வாழும் மனை வாழ்க்கையில் உரிமைப் பாகுபாடு ஏது: உயர்வு தாழ்வு ஏது? செயற்கைப் பிரிதல் ஏது? இயற்கைப் பிரிவுகளையும் கூடத் தேடிப் புதுமைப்படுத்தி ஏற்றுக் கொள்ளுதல் தானே உயர் தனி மரபு! வள்ளுவம் காட்டும் காதல் வாழ்க்கை வெற்றி பெறுமானால் தலைமகன் சிறப்பான்; புகழ் ஒளியில்