பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிடைப்பதில்லை. ஒரோவழி கிடைத்தாலும் அவர்கள் துய்த்துத் துய்த்து அலுத்துப்போன சோறும் புளிக் குழம்பும்தான் கிடைக்கும். அறுசுவை உணவு அவர்களுக்கு அட்டிப்போட்டால் கட்டுப்படியாகாதாம். இது பெரிய இடத்து "பாஷை”. ஆதலால் இல்லறத்தார் துவ்வாதவர்கள் துய்க்குமாறெல்லாம் தேடி வழங்க வேண்டும்.

அடுத்த கடமை வியத்தற்குரியது. "இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணை” என்பது. இறந்தார்க்கு எப்படி இல்வாழ்வான் துணை ஆகமுடியும்? நீத்தார் கடமை என்ற பெயரில் இறந்தாரை நினைத்துச் செய்தல் என்பர் சிலர். அக்கருத்து தவறுடையதில்லையானாலும் நெறியுடையதென ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நம்மோடு சிலர், இலட்சிய உணர்வோடு வாழ்ந்த சிலர் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் இலட்சியப் பயணத்தில் இறந்திருப்பர். அவர்கள் நமக்காக வாழ்ந்தவர்கள். அவர்கள் தமக்கென வாழாது மற்றவர்க்கென வாழ்ந்து இலட்சியப் பயணத்தில் இறந்து போனவர்கள். அவர்களுடைய இலட்சியத்தைத் தொடர்ந்து நாம் பயணம் செய்து அந்த இலட்சியத்தை நிறைவு செய்தல் அவர்களுக்குத் துணை செய்வதாகும். வேறு சிலர் தமது குடும்பத்துக்கு, குழந்தைகளுக்கு உரியன செய்து வைக்காமல் பச்சிளங்குழந்தைகளை விட்டு இறந்து போயிருக்கலாம். அங்ஙனம் இறந்தார்க்கு நாம் செய்யக் கூடிய துணை அக் குடும்பத்தினை வளர்த்துப் பாதுகாத்து நிலை நிறுத்துதல். இவ்விரண்டும் இறந்தார்க்குச் செய்யும் துணை என்று கருதுகிறோம். வேறு சில கடமைகளையும் வள்ளுவம் கூறுகிறது. விரிவஞ்சி விடுக்கின்றோம்.

வள்ளுவம் காட்டும் இல்லற வாழ்க்கை இத்தகைய பொறுப்புகள் உடையது என்பதை உலகம் உணரவேண்டும். அது மட்டுமா? இல்லறம், வளரும் வரலாற்றுக்கும் கூடப் பொறுப்பேற்க வேண்டும் என்பது வள்ளுவத்தின் ஆணை. தலைமுறையின் தோற்றத்திற்கு அடிப்படையாக, வாயிலாக