பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மறுவார்த்தை பேசவேண்டுமே. "துறந்தாரில் தூய்மை யுடையார்” போலத் தம்மைப் பழித்தாரைத் தாம் பழிக்காமல் வாழ்ந்தார். ஓர் இயக்கத்தையே வளர்த்தார். இப்பெரு மகனாரின் முன்னேற்றத்தை எப்படியும் தடை செய்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற முனைப்பு எதிர்த் தரப்பில் இருந்தது. ஆனால் இவருக்கு ஆத்திரமும் இல்லை; காழ்ப்பும் இல்லை. தம்மை எதிர்த்தாரையும் உள்ளடக்கி மகத்தான வெற்றி பெற்றார்; வெற்றிக் களிப்பில் அகங்காரம் கொள்ளவில்லை; தமது வெற்றிக்குத் தடையாயிருந்தவர் களை பெற்ற அதிகாரத்தைக் கொண்டு துன்புறுத்த நினைக்கவில்லை; கமிஷன்களை நியமித்து விசாரிக்க வில்லை; ஏசியவர்கள் இருந்த இடம் நோக்கிச் சென்று பணிவைக் காட்டினார்; பண்பாட்டைக் காட்டினார். இவ்வாறு பகையையும் உறவாக்கிக்கொண்டு இனம் காத்த ஒப்பற்ற தலைமகனைப் போன்ற மற்றொருவனைத் தமிழக வரலாறு கண்டதில்லை. அவரும் வாழ்ந்து மறைந்துவிட்டார். அந்த ஒப்பற்ற தலைமகன் - தமிழ்த்தாயின் தவப்புதல்வன், இனத்தைக் கட்டிக் காப்பாற்றிய அருமைப்பாட்டை நினைத்தால் நெஞ்சு நெகிழும். எனதருமைத் தமிழ்ப் பெருங்குடி மக்களே! வள்ளுவத்திற்கு விளக்கமாகக் குடி செயற்பண்பின் இலக்கணமாக வாழ்ந்த அத் தலைமகனை இனம் கண்டு கொள்ளுங்கள். அவர் போற்றிய இன நலம் காக்கும் பணியை உறுதியுடன் செய்யுங்கள்.

நாகரிகம்

மனித வாழ்க்கை, நாகரிகம் உடையதாக அமைய வேண்டும். நாகரிகம் என்பது உலகை இடையறாது உய்த்து நடத்தும் ஒரு சிறப்புடைய உணர்வு வழிப்பட்ட ஒழுக்கமாகும். நாகரிகம் என்பது உடலில் கலந்து, உயிரில் கலந்து, உணர்வில் கலந்து, வாழ்க்கையின் விளக்கமாக அமைவது, மனிதச் சந்தையில் வாழ்கிறோம். மனிதச் சந்தையில் எவர் நல்லவர்? எவர் தீயவர்? என்று எளிதில் காணமுடியாது.