பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அணிந்துரை
முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்

உலகில் இன்று இல்லெனினும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் புகழுருவாய் என்றென்றும் நிலைத்திருப்பவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். பூ என்றால் தாமரை, ஊரென்றால் உறையூர் என்றாற்போல, ‘அடிகளார்’ என்று சொன்னால் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதி தொடங்கிக் குன்றக்குடி அடிகளார் அவர்களையே குறிப்பதாயுள்ளது. ‘வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்று கண்ணகியை இளங்கோவடிகள் குறிப்பது போல, மடங்களின் தளத்தை விடுத்து மண்ணில் கால் வைத்தறியா ஆதீனத் தலைவர்கள் பலரும் உள்ள இக்காலத்தில் கல்லிலும் முள்ளிலும், காட்டிலும் மேட்டிலும், கழனியிலும் புழுதியிலும் மக்களோடு மக்களாய் ஒன்றிப் பழகியும் மக்கள் நலப் பணிகளாற்றியும் வந்த ஆதீனத் தலைவர் குன்றக்குடி அடிகளார் ஒருவரேயெனில் மிகையன்று.


Leigh Hunt என்பார் எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்று ‘Abu Ben Adhem, may his tribe increase’ எனும் முதலடியுடன் தொடங்குகிறது. ஒரு நாள் இரவில் அபூ பென் ஆதம் தன் அறையினுள் நுழைந்த ஒளிக்கற்றையில் தேவதை ஒன்று

தங்கத் தகட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘என்ன எழுதுகிறீர்?’ என்று கேட்டான். தேவதை, உலகில் கடவுளை யார் மிகுதியும் பூசை செய்கிறார்களோ அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதாகக் கூறியது. அப்பட்டியவில் அவன் பெயர் இல்லை. ‘மக்களுக்குத் தொண்டு செய்யும் ஒருவன்’ எனத் தன் பெயரை இறுதியில் சேர்த்துக் கொள்ளுமாறு அவன் வேண்ட, தேவதையும் அவ்வாறே எழுதிச் சென்றது. மறுநாளும் முன் நாள் போலவே தேவதை தோன்றியது. அதன் கையில் ஓர் ஏடு இருந்தது. அதில் கடவுள் யாரை மிகவும் நேசிக்கிறார் எனும் பெயர்ப் பட்டியல் இருப்பதாகத் தேவதை கூறியது. அபூ பென் ஆதம் தன் பெயர் அப்பட்டியலில் உள்ளதா என்று கேட்டபோது, அவன் பெயரே முதற்பெயராக இருப்பதாகத் தெரிவித்துத் தேவதை மறைந்தது. மக்கள் தொண்டே இறைவனுக்குச் செய்யும் உண்மையான பூசை என்பதை இக்கவிதை விளக்குகிறது.