பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 137


தீயவர்களோடு சமாதானம் கூடாது. அவர்களோடு ஒட்டும் உறவும் கூடாது. தீமை, தீயைவிடக் கொடியது.

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்." (202)

தீமை இருபாலும் கேடு செய்யும். தீமை எளிதில் மாற்ற முடியாதது. தீமை ஒரு தலைமுறைக்கு மட்டுமல்லாது பல தலைமுறைக்கும் கேடுசெய்யும். ஆதலால் சமுதாயத்தில் புகழ் பூத்த வாழ்க்கை வாழ வேண்டுமானால் தீமையை எதிர்த்துப் போராடும் மனப்போக்கும் உறுதியும் வேண்டும். தீமையைத் தவிர்ப்பதற்குரிய சிறந்த வழி, தீமையை எதிர்ப்பது மட்டுமல்லாமல், தீமையை முற்றாக மாற்றக்கூடிய நல்லன. இயற்றும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு, நன்மையைச் சமுதாயத்தில் படைக்க வேண்டும். அப்பொழுது புகழ் பூத்த வாழ்க்கை கிடைக்கும். புகழ், ஒரு போதைப் பொருள் அல்ல. புகழ், போதைப் பொருளாகவும் கூடாது. அது நெடி இல்லாத மெல்லிய மணம்! உயிர்ப்புள்ள மணம்! மேலும் மேலும் மனித குலத்தை அது வளர்க்கும். அத்தகைய புகழ்மிக்க சமுதாயத்தைப் படைப்பதே வள்ளுவத்தின் வாழ்வியல். உலகுக்கு ஒரு பொதுநெறியைச் சொன்னதால் திருக்குறள் உலகப் புகழ்பெற்றது. உலகப் பொதுமறையைத் தந்ததால் தமிழ் உலகப்புகழ் பெற்றது. உலகப் பொதுமறையைத் தந்ததால் திருவள்ளுவர் உலகம் தழிஇய புகழ் பெற்றார். திருவள்ளுவரை ஈன்றெடுத்துத் தந்ததால் தமிழகம் உலகு தழுவிய புகழ்பெற்றது. இன்று திருவள்ளுவர், திருக்குறள் என்ற பெயர்கள் புகழைச் சேர்க்கும் மந்திரங்களல்ல. வள்ளுவத்தின் வாழ்வியலைத் தமிழினத்தின் வாழ்வியலாகச் செய்தாலேயே இன்றைய தமிழினம் புகழ்பெற முடியும். வள்ளுவம் வளர்க! வெற்றி பெறுக!